உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / படிக்க, துாங்க முடியலையே; கவலையில் கதறும் கல்மேடு கிராம மக்கள்; ஓராண்டாக குறைந்தமின் அழுத்ததால் அவதி

படிக்க, துாங்க முடியலையே; கவலையில் கதறும் கல்மேடு கிராம மக்கள்; ஓராண்டாக குறைந்தமின் அழுத்ததால் அவதி

மதுரை : ஆண்டார் கொட்டாரம் ஊராட்சி கல்மேடு பகுதியில் பல ஆண்டுகளாக முறையான மின் விநியோகம் இன்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கல்மேடு, கொண்டபெத்தான், களஞ்சியம், கருப்பிள்ளையேந்தல், இளமனுார், அன்னை சத்யா நகர் பகுதிகளில் துப்புரவு, கட்டட தொழிலாளர்கள் பல ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு ஓராண்டுக்கும் மேலாக இரவு நேரத்தில் மின்சாரம் குறைந்த அழுத்தத்தில் வினியோகமாகிறது. இதனால் இரவு முழுவதும் மக்கள் பல்வேறு பிரச்னைகளுடன் அவதிப்படுகின்றனர்.கொண்ட பெத்தான் விமலா கூறியதாவது: விரிவாக்க பகுதி என்பதால் தனியாக டிரான்ஸ்பார்மர் வைத்தால் தான் இங்கு நிலவும் மின்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என மின்வாரிய ஊழியர்களே கூறுகின்றனர். இப்பகுதியில் மின்கம்பத்தில் விளக்குகளே இல்லை. இருக்கும் ஒருசில விளக்குகளும், இரவு நேரத்தில் எரிவதில்லை. மாணவர்கள் உட்பட பலரும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து போராட்டம் நடத்தி, மின்ஊழியர்களிடம் தெரிவித்தால், எங்களுக்கு சம்பந்தமில்லை என்கின்றனர். இதனால் யாரிடம் குறையை தெரிவிப்பது எனத் தெரியவில்லை.இந்துமதி, 28 : பூ வியாபாரம் செய்வதால், தொடுத்த பூக்களை குளிர் சாதன பெட்டியில் வைப்பதுண்டு. ஆனால் மின்சாரம் தொடர்ந்து துண்டிக்கப்படுவதால் பூ பயனற்றுப் போகிறது. இதனால் எங்கள் வாழ்வாதாரமே பாதிக்கிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இரவு நேரம் நிலா, டார்ச், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கின்றனர். மின் விசிறி இயங்காமல் கொசுக்கடியால் இரவு நேரம் துாங்க முடியாமல் தவிக்கிறோம். முதியோர், நோயாளிகள் நிலை பரிதாபமாக உள்ளது.மோகனவள்ளி: இங்கு ஓராண்டாக வசிக்கிறோம். வந்தது முதல் மின்வினியோக பாதிப்பு உள்ளது. இதுபற்றி புகார் செய்த பின்னும் இதுவரை நடவடிக்கை இல்லை. 4 மின்கம்பங்கள் விழும் நிலையில் உள்ளன. 105 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துவதால் பகலிலும், இரவிலும் துாங்க முடியாமல் படுக்கையி்ல் உழல்கிறோம். தொழிலாளர்கள் மறுநாள் வேலைக்கு செல்வது சவாலாக இருக்கிறது. தெருவிளக்குகள் இல்லாமல் மாலைப் பொழுதில்கூட நடமாட பெண்கள் அச்சப்படுகின்றனர். ஆண்டுக் கணக்கில் இப்பிரச்னை உள்ளதால், கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ