ரயிலில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டு சிறை
மதுரை: ரயில்களில் பட்டாசுகள் உள்ளிட்ட எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு பயணிகள் நலன் கருதி சென்னையில் இருந்து பல்வேறு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது. கோட்டத்தில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய ஸ்டேஷன்களில் அக்., 21 வரை கூடுதல் டிக்கெட் கவுன்டர்கள், தானியங்கி டிக்கெட் இயந்திரங்களை இயக்க கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்டேஷன்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க நுழைவு வாயிலில் தீவிர டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ரயில்வே பாதுகாப்பு படையினர், தமிழக ரயில்வே போலீசார் இணைந்து கூட்டத்தை கட்டுப்படுத்தி பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர். வைகை, குருவாயூர், ஹவுரா உள்ளிட்ட முக்கிய ரயில்களில் தனி கவனம் செலுத்தப்படுகிறது. இந்நிலையில் பாதுகாப்பு விஷயத்தில் பயணிகளின் ஒத்துழைப்பையும் ரயில்வே நிர்வாகம் எதிர்ப்பார்க்கிறது. ரயில்வே தரப்பில் கூறுகையில், ''ரயில்களில் பட்டாசுகள், வெடி பொருட்கள், மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், சமையல் அடுப்பு, சிலிண்டர் போன்றவற்றை எடுத்துச் செல்பவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். மேற்கண்ட பொருட்களைக் கொண்டு செல்வதை தடுக்க, மோப்ப நாய் உதவியுடன் நடைமேடைகள், பார்சல் அலுவலகங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். எனவே பாதுகாப்பை கருத்தில் கொண்டு எளிதில் தீப்பற்றும் பொருட்கள் கொண்டு செல்வதை பயணிகள் தவிர்க்க வேண்டும்'' என்றனர்.