மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிராக வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: திருச்சி மாநகராட்சியுடன் குண்டூர் ஊராட்சியை இணைப்பதற்கு எதிரான வழக்கில், 'இதில் அரசு இறுதி அறிவிப்பு வெளியிடுவதற்கு முன் மக்களின் ஆட்சேபனைகளை பரிசீலிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருவெறும்பூர் அருகே குண்டூர் மரிய மைக்கேல் தாக்கல் செய்த பொதுநல மனு: திருச்சி மாநகராட்சியுடன் குண்டூர் ஊராட்சியை இணைக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. குண்டூர் முழுமையான விவசாய கிராமம். இதை மாநகராட்சியுடன் இணைத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். ஜன.,26ல் நடந்த கிராம சபை கூட்டத்தில் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மைச் செயலர், கலெக்டருக்கு ஆட்சேபனை மனு அனுப்பினோம். பரிசீலிக்கவில்லை. நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.ஸ்ரீமதி, ஆர்.விஜயகுமார் அமர்வு: மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அரசு தற்காலிக அடிப்படையில் மட்டுமே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மனுதாரர் மற்றும் கிராமத்தின் பிறர் சமர்ப்பித்த ஆட்சேபனைகளை கவர்னரின் முதன்மைச் செயலருக்கு அனுப்ப வேண்டும். பின் இறுதி அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு, மனுதாரர் மற்றும் கிராமத்தின் பிறரது ஆட்சேபனைகளை சட்டப்படி பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டது.