உறுதி கடிதம் அளித்த சி.இ.ஓ., ஆசிரியர் போராட்டம் வாபஸ்
மதுரை; கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக சி.இ.ஓ., கடிதம் மூலம் உறுதி அளித்ததால் ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. கல்வித்துறையில் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர், கலெக்டர் நேர்முக உதவியாளர் (கல்வி) ஆகியோர் நியமனத்தில் விதிமுறை மீறல் உள்ளது. இந்நியமனங்களை ரத்து செய்து பி.ஜி., ஆசிரியர்களை நியமிக்க கோரி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. சங்க நிர்வாகிகளிடம் சி.இ.ஓ., ரேணுகா மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் நேற்று மாலை ஒருங்கிணைப்பாளர் பாண்டி தலைமையில் சி.இ.ஓ., அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் துவங்கியது. அவர்களிடம் இரவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது 'கோரிக்கையை நிறைவேற்றுவதாக சி.இ.ஓ., கடிதம் மூலம் உறுதியளிக்க வேண்டும்' என நிர்வாகிகள் நிபந்தனை விதித்தனர். இதை ஏற்று, 'மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளராக முதுகலை ஆசிரியர் முனியாண்டியை மாற்றுப் பணியில் இன்று முதல் (அக்.,15) நியமிப்பது, கலெக்டர் நேர்முக உதவியாளர் நியமனம் மாற்றம் குறித்து உரிய அதிகாரியிடம் தெளிவுரை பெற்று நவ.,10க்குள் நடவடிக்கை எடுக்கப்படும்' என சங்க நிர்வாகிகளுக்கு சி.இ.ஓ., ரேணுகா கடிதம் அளித்தார். இதை ஏற்று போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.