மதுரையில் பன்னாட்டு விமான சேவை வேண்டும் சி.ஐ.ஐ., பிரதிநிதிகள் கோரிக்கை
மதுரை: விசாகபட்டினத்தில் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை சந்தித்த சி.ஐ.ஐ., மதுரை மண்டல பிரதிநிதிகள், மதுரையை பன்னாட்டு விமான சேவையாக அறிவிக்கக் கோரிக்கை விடுத்தனர். சி.ஐ.ஐ., மண்டலத்தலைவர் அஸ்வின் தேசாய், முன்னாள் தலைவர் லிஜி ஜார்ஜ், மதுரை அக்ரி மற்றும் அனைத்துத் தொழில் வர்த்தகச் சங்கத் தலைவர் ரத்தினவேலு ஆகியோர் மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை விசாகபட்டினத்தில் சந்தித்தனர். சி.ஐ.ஐ.,யின் புது மதுரை திட்டத்தின் கீழ் மதுரையை பன்னாட்டு விமான நிலையமாக மாற்றக் கோரினர். அவர்கள் கூறுகையில், 'மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான சேவையாக அறிவித்து செயல்படுத்த வேண்டும். உள்கட்டமைப்பை விரிவுபடுத்தி உள்ளூர் விமான சேவையை அதிகப்படுத்த வேண்டும்'என்றனர். விமானப் போக்குவரத்துத் துறை செயலாளர் சமீர் குமார் சின்ஹா, இந்திய விமான நிலைய ஆணையத் தலைவர் விபின்குமார், சி.ஐ.ஐ., துணைத்தலைவர் சுசித்ரா உடனிருந்தனர்.