| ADDED : ஜன 19, 2024 05:12 AM
மதுரையில் தி.மு.க., கட்சிரீதியாக நகர், வடக்கு, தெற்கு என மூன்று மாவட்டங்களை கொண்டுஉள்ளது. நகரில் 18 பகுதி, 73 வட்ட செயலாளர்களும், இரண்டு மாவட்டங்களில் 27 ஒன்றிய செயலாளர்களும் உள்ளனர். அவர்களுக்கு கீழ் வட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் உள்ளனர்.கட்சிக்காக உழைக்கும் வட்ட, கிளை நிர்வாகிகள்தீபாவளி, பொங்கல் கொண்டாட மா.செ.,க்கள் சார்பில் 'கவனிப்பது' வழக்கம். இந்த பொங்கலுக்கு வழங்கியதில் சில பகுதி, வட்ட செயலாளர்களை தவிர மா.செ.,க்கள் வழங்கியதில் பெரிய அளவில் 'கமிஷன்' எடுத்துக்கொண்டு மீதத் தொகையை பெயருக்கு வழங்கியதாகவும், சில வட்டச் செயலாளர்கள் 'தொகை' முழுவதையுமே கபளீகரம் செய்துகொண்டதாகவும் சர்ச்சை வெடித்துள்ளது. குறிப்பாக நகர் தி.மு.க.,வில் அதிக கபளீகரம் நடந்துள்ளதாக செயலாளர் தளபதிக்கு ஏராள புகார்கள் சென்றுள்ளன.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:இந்த பொங்கலுக்கு ஒரு பகுதி செயலாளருக்கு தலா ரூ.1 லட்சம், வட்ட செயலாளருக்கு தலா ரூ. 80 ஆயிரம் என பொங்கல்'கவனிப்பு' நடந்துள்ளது. இதில் அவர்களுக்கு கீழ் உள்ள வட்ட கழக நிர்வாகிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம், பி.எல்.ஏ., 2 ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால் பெரும்பாலான வார்டு நிர்வாகிகளுக்கு தொகை சென்றடையவில்லை. பகுதி, வட்ட செயலாளர்கள் தங்கள் பாக்கெட்டுகளை நிரப்பிக்கொண்டனர். இதேநிலை தான் தெற்கு, வடக்கு மாவட்டங்களிலும் நடந்துள்ளது. தொகை பட்டுவாடா குறித்து மா.செ.,க்கள் விசாரிக்க வேண்டும் என்றனர். உள்கட்சிக்குள்ளேயே நடந்துள்ள இந்த 'கமிஷன்' விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.