கலெக்டர் அலுவலக சுவரில் கம்யூ., கொடி: பா.ஜ., எதிர்ப்பு
மதுரை : மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு இன்று (ஏப்.2) துவங்கி ஏப். 6ம் தேதி வரை நடக்க உள்ளது. தேசிய அளவிலான தலைவர்கள் மதுரைக்கு வர உள்ளனர். மதுரையில் பிரமாண்டத்தை காட்ட கட்சியினர் இரவு பகலாக வேலை செய்கின்றனர்.நகரெங்கும் கட்சிக் கொடி, பேனர்கள், தோரணங்கள் கட்டி வருகின்றனர். ஆர்வ மிகுதியில் தொண்டர்கள் பலர் அரசு கட்டடங்களிலும் கட்சிக் கொடி கட்டி உள்ளனர். மதுரை கலெக்டர் அலுவலக காம்பவுண்ட் சுவர், மருத்துவ கல்லுாரி காம்பவுண்ட் சுவர், ஆரப்பாளையத்தில் போலீஸ் தடுப்பு கம்பிகளில் கொடிகளை கட்டியுள்ளனர். இது பிற அரசியல் கட்சிகளிடம் எதிர்ப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பா.ஜ.,வினர் இதனை கண்டித்து, மாவட்ட அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.நகர தலைவர் மாரிசக்கரவர்த்தி கூறியதாவது: மாநாட்டுக்காக கொடிகள் கட்டுவது தவறில்லை. அரசு கட்டடங்கள், தடுப்பு கம்பிகளில் கட்டுவதை ஏற்க முடியாது. இதுகுறித்து கலெக்டர், போலீஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். ஆரப்பாளையம் ஜல்லிக்கட்டு ரவுண்டானாவில் தடுப்பு கம்பிகளில் கட்டியது குறித்து போலீசாரிடம் தெரிவித்த சில நிமிடங்களில் அவற்றை அகற்றிவிட்டனர். இதேபோல ஒத்தக்கடை ரோட்டிலும் கட்டியுள்ளனர். இவ்வாறு செய்தால் பிற கட்சியினரும் அதை பின்தொடர்வார்கள் என்றார்.