மதுரை விமான நிலைய விரிவாக்கம் முதல்வர் மீது காங்., எம்.பி., நம்பிக்கை
திருநகர்: ''மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக தமிழக அரசு செய்ய வேண்டிய பணிகள் மற்றும் ஒதுக்க வேண்டிய நிதி உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது'' காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். மதுரையில் அவர் கூறியதாவது: 2024 தேர்தலில் வாக்கு திருட்டு நடந்திருப்பதாக ராகுல் எம்.பி., பெங்களூரு மத்திய தொகுதியில் நிரூபித்துள்ளார். இதேபோல் 48 தொகுதிகளிலும் நடந்துள்ளதால் மத்திய அரசு பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என காங்., போராட்டம் நடத்துகிறது. ராகுல் கைதுக்கு த.வெ.க., தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்ததற்கு நன்றி. தமிழகத்தில் புதிதாக 6 லட்சம் வாக்காளர்கள் சேர்த்தது ஊழல் என பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். அவருக்கு என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. ஆர்.எஸ்.எஸ்., பின்னணியுடன் தேர்தல் கமிஷன் பா.ஜ.,வுக்கு சாதகமாக செயல்படுகிறது. இது மிக ஆபத்து. சென்னையில் துாய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டது மிகவும் வருத்தத்திற்குரியது.அவர்களின் ஜனநாயக உரிமையை அரசும், அதிகாரிகளும் காக்க வேண்டியது கடமை. மதுரை விமான நிலைய விரிவாக்க பிரச்னை குறித்து நிதி அமைச்சரிடம் பேசி இருக்கிறேன். விரிவாக்க பணிக்காக தமிழக அரசு செய்ய வேண்டிய பணிகள் மற்றும் ஒதுக்க வேண்டிய நிதி உள்ளிட்டவற்றை நிறைவேற்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் முடிவெடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.