மேலும் செய்திகள்
விஜயுடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டும் கட்சிகள்
16-Sep-2025
மதுரை: தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க.,வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற எண்ணம் காங்., மேலிட நிர்வாகிகளிடையே வலுத்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால் அங்குள்ள விஜய் ரசிகர்களின் ஓட்டுக்களை அப்படியே காங்., அறுவடை செய்ய முடியும் என ராகுலிடம் ஆலோசனை சொல்லப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் தி.மு.க., - அ.தி.மு.க., என இரண்டு கட்சிகளை விட்டால் தேசிய கட்சிகளான பா.ஜ., காங்.,க்கு வேறு வழியில்லை என்ற நிலை இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் 'எங்களுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு அளிக்கப்படும்' என்ற கவர்ச்சி அறிவிப்பை வெளியிட்டு, திராவிட கட்சிகளுக்கு எதிராக அரசியல் களத்தை சூடாக்கினார், த.வெ.க., தலைவர் விஜய். இதையடுத்து தமிழக காங்., முன்னாள் தலைவர் அழகிரி உள்ளிட்ட தலைவர்கள் விஜய்யுடனான கூட்டணி என்ற எண்ணத்தை வெளிக்காட்டாமல், ஆட்சியில் பங்கு கேட்பதில் தவறில்லை. அது காங்., உரிமை என வெளிப்படையாக பேசி வருகின்றனர். இதனால் தமிழக காங்.,ல் விஜய்க்கு ஆதரவு, எதிர்ப்பு என இரண்டு கோஷ்டிகள் உருவாகியுள்ளது. இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை வைத்து, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்குள் த.வெ.க.,வை இழுக்கும் முயற்சி நடக்கிறது. அதேநேரம் அகில இந்திய காங்., பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் உட்பட டில்லி தலைவர்கள், த.வெ.க.,வுடன் கூட்டணி வைக்கும் எண்ணத்தில் ராகுலிடம் ஆலோசனை சொல்லி வருகின்றனர். குறிப்பாக கே.சி.வேணுகோபால் அடுத்தாண்டு கேரளாவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் முதல்வர் பதவிக்கு குறி வைத்து காய் நகர்த்துகிறார். கரூர் சம்பவத்திற்கு ஆறுதல் சொல்ல காங்கிரஸ் சார்பில் டில்லியில் இருந்து கே.சி.வேணுகோபால் வந்தது இங்கு கவனிக்கதக்கது. கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் ஓட்டு கை கொடுக்கும் என்ற கனவில் காங்., - த.வெ.க., கூட்டணிக்கு இவர் கணக்கு போட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து காங்., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: கட்சி துவக்கியதில் இருந்து காங்., குறித்து விஜய் இதுவரை ஒரு வார்த்தை கூட விமர்சிக்கவில்லை. பா.ஜ.,வை தான் கடுமையாக சாடி வருகிறார். கரூர் சம்பவம் அவருக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ள நிலையில் பா.ஜ., அவரை தன் வழிக்குகொண்டு வர முயற்சிக்கிறது. அதேநேரம் அதை தடுக்க ராகுலை விஜய்யுடன் பேச வைத்ததில் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி., வேணுகோபாலுக்கு முக்கிய பங்குண்டு. அவரது கட்சிப் பதவி ஓராண்டில் முடியவுள்ளது. அதையடுத்து அவரது சொந்த மாநிலமான கேரளாவில், முதல்வர் பதவிக்கு குறிவைத்து காய் நகர்த்துகிறார். இப்போது விஜய்யுடன் கூட்டணி வைத்தால், அடுத்தாண்டு நடக்கவுள்ள கேரள சட்டசபை தேர்தலின்போது கேரளாவில் விஜய்க்கு உள்ள ரசிகர்கள் ஓட்டு காங்.,க்கு கை கொடுக்கும் என்ற அரசியல் கணக்குடன் வேணுகோபால் தற்போது முழு முயற்சி எடுத்து வருகிறார். இருப்பினும் கூட்டணி குறித்து ராகுல் தான் முடிவு எடுப்பார். அவரிடம் டில்லி தலைவர்கள் விஜய் உடனான கூட்டணி குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்றனர்.
16-Sep-2025