தி.மு.க., நிர்வாகிகளுக்குரூ.1 லட்சம் பரிசு அறிவிப்பு அமைச்சர் அறிவிப்பால் நெருக்கடி
மதுரை: 'மதுரை தி.மு.க., வடக்கு மாவட்டத்தில் அதிக உறுப்பினர்களை சேர்க்கும் நிர்வாகிகளுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம் வழங்கப்படும்' என்ற அமைச்சர் மூர்த்தி அறிவிப்பால் மதுரை நகர், தெற்கு மாவட்ட செயலாளர்களுக்கு மறைமுக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உத்தங்குடியில் நடந்த வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் இளைஞரணி உறுப்பினர்கள் சேர்க்கை குறித்த செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மாநில இளைஞரணி துணை தலைவர் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் அமைச்சர் மூர்த்தி பேசுகையில் வடக்கு மாவட்டத்தில் அதிக உறுப்பினர்களை சேர்க்கும் இளைஞரணி நிர்வாகிகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். இதுபோல் 2, 3, 4 வது பரிசுகளும் காத்திருக்கிறது. இளைஞரணி மண்டல மாநாடு மதுரையில் நடத்த தலைமையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. வாய்ப்பு கொடுத்தால் பிரமாண்டமாக நடத்தி, மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் தி.மு.க., கைப்பற்ற பணியாற்ற வேண்டும் என்றார். அமைச்சரின் இந்த அறிவிப்பால், நகர் செயலாளர் தளபதி, தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோரும் இதுபோல் பரிசு அறிவிக்க வேண்டும் என அவர்களின் மாவட்ட நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.