உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டெண்டர் விடுவதில் தாமதம்; குழாய் இணைப்பு துவங்கவில்லை; அரசு மருத்துவமனையில் தவிப்பு

டெண்டர் விடுவதில் தாமதம்; குழாய் இணைப்பு துவங்கவில்லை; அரசு மருத்துவமனையில் தவிப்பு

மதுரை : மதுரை அரசு மருத்துவமனையின் குடிநீருக்காக முல்லைப்பெரியாறு 3வது கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சம் செலுத்தியும் மாநகராட்சி டெண்டர் விடுவதில் ஏற்பட்ட தாமதத்தால் மருத்துவமனைக்கு தற்போது வரை குடிநீர் இணைப்பு வழங்கவில்லை. இம்மருத்துவமனையின் தண்ணீர் தேவைக்காக மணலுாரில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு தெப்பக்குளம் நீரேற்று நிலைய மேல்நிலைத்தொட்டியில் தண்ணீர் தேக்கப்பட்டு குழாய் மூலம் மகப்பேறு வார்டில் உள்ள கீழ்நிலைத் தொட்டியில் நிரப்பப்படுகிறது. இதன் மூலம் தினமும் 5 முதல் 6 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் பெறப்படுகிறது. புதிதாக கட்டப்பட்ட அறுவை சிகிச்சை வளாகத்திற்கு இங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஆர்.ஓ., குழாய்கள் மூலம் குடிநீராக வழங்கப்படுகிறது. பிற வார்டுகளில் ஆர்.ஓ., குடிநீரே வழங்கப்படுகிறது. இதில் குறிப்பிட்ட மணி நேரத்திற்கு ஆயிரம் லிட்டர் அளவே தண்ணீர் கிடைக்கும் என்பதால் முல்லைப்பெரியாறு 3வது கூட்டு குடிநீர்த் திட்டத்தின் கீழ் மாநகராட்சியிடம் குடிநீர் பெறுவதற்காக ரூ.23 லட்சத்தை பிப்.,ல் அரசு மருத்துவமனை செலுத்தியது. இதற்காக குருவிக்காரன் சாலை பாலம் அருகேயுள்ள எஸ்.எம்.பி., காலனியில் உள்ள மேல்நிலைத் தொட்டியில் இருந்து குழாய் மூலம் மருத்துவமனைக்கு தண்ணீர் பெற ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த குழாய் பதிக்கும் பணிக்காக டெண்டர் விடுவதில் மாநகராட்சி தொடர்ந்து தாமதம் செய்வதால் பணம் செலுத்தி 5 மாதங்களுக்கு மேலாகியும் திட்டம் துவங்க கூட இல்லை. இந்த தண்ணீரை நம்பி மகப்பேறு வார்டு பகுதியில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவில் மேல்நிலைத் தொட்டி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்காலிகமாக எஸ்.எம்.பி., காலனி தண்ணீர்த்தொட்டியில் இருந்து பெறும் தண்ணீரை தேக்கி வைப்பதற்கு ஏற்கனவே உள்ள கீழ்நிலை, மேல்நிலைத் தொட்டிகள் தயாராக உள்ளதால் தாமதமின்றி டெண்டர் பணியை மாநகராட்சி துவங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை