தாமதமாகும் இடைநிலைஆசிரியர்கள் பணி நியமனம்
மதுரை:தொடக்க கல்வித்துறையில் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) முடித்து நியமன தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரில் கள்ளர் பள்ளிகளை தேர்வு செய்தவர்களுக்கு இதுவரை நியமன உத்தரவு வழங்கப்படவில்லை.டி.ஆர்.பி., சார்பில் நடத்திய நியமனத் தேர்வில் மாநில அளவில் 2437 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் பள்ளிக் கல்விக்கு உட்பட்ட பள்ளிகளில் 2419 பேர் நியமிக்கப்பட்டனர். அதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டு ஜூலை 25 ல் பணியில் சேர்ந்தனர். ஆனால் கள்ளர் சீரமைப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்ட 18 இடைநிலை ஆசிரியர்களுக்கு இதுவரை பணி நியமன உத்தரவுகள் வழங்கவில்லை. இதனால் ஒரே நேரத்தில் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வியில் பணியில் சேர்ந்தும், கள்ளர் பள்ளிகளில் பணியில் சேராத சூழலால் சீனியாரிட்டி, சம்பளம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறுகையில், சான்றிதழ் சரிபார்ப்பு, போலீஸ் சான்றுபெறுதல் என அனைத்தும் முடிந்த நிலையில் இத்துறையின் கவனக்குறைவால் இன்னும் நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. ஒரே நேரத்தில் தேர்வாகி ஒரு வாரத்திற்கு பின்னரும் பணியில் சேர முடியாததால் தலைமையாசிரியர் பதவி உயர்வின்போது மாநில சீனியாரிட்டி உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றனர்.