ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை பெண்கள் வேதனையை அறிவாரா கலெக்டர்
மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., அன்பழகன், நேர்முக உதவியாளர் சந்திரசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.குசவப்பட்டி விராதனுார் பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் அமைய உள்ள தனியார்கல்குவாரியை நிறுத்த வேண்டும். குவாரியில் இருந்து 300 மீ., க்குள் வீடு உள்ளதால் காற்று மாசுபாடு, சுவாசக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குழந்தைகளுக்கு உடனடி பாதிப்பு ஏற்படும். எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.செல்லுார் சிவன்கோவில் மக்கள் சார்பாக வி.சி.க., நிர்வாகி சரவணன் மனு: எங்கள் பகுதி காலியிடத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க உள்ளனர். மைதானம் அமைத்தால் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்படும். மக்கள் அடிப்படை வசதி இன்றி தவிக்கின்றனர். அவர்களுக்கு அங்கன்வாடி மையம், கழிவறை வசதி, பெண்கள் பள்ளி அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.பேரையூர், அழகு ரெட்டிபட்டி மக்கள் அளித்த மனு: கிராம ஊருணி, கழிவுநீர் செல்லும் பாதையை ஆக்கிரமித்து வீடு, கடை அமைத்துள்ளனர். அதனால் நீர் செல்வது தடைபடுகிறது. போலீசில் புகார் அளித்தும் பயன் இல்லை. நேரில் பார்வையிட்டு இடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். பெண்கள் வேதனை
குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்க பேரையூர், கள்ளிக்குடி, உசிலம்பட்டி உட்பட தொலைதுார பகுதியில் இருந்தும் ஏராளமான பெண்கள் கைக்குழந்தைகளுடன் வருகின்றனர். கோடை வெயிலில் வரும் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். மனுவை பதிவு செய்யும் இடத்தில், போதிய இருக்கை இல்லாமல் பலர் படிக்கட்டுகளில் அமர்கின்றனர். கைக்குழந்தைகளுடன் வருவோருக்கு தனி வரிசை, பாலுாட்டும் அறை இருந்தால் வசதியாக இருக்கும்.