பொது நிலத்தில் பூங்கா அமைப்பதா குடியிருப்போர், கவுன்சிலரிடையே தகராறு
மதுரை : மதுரை மாநகராட்சி 70வது வார்டு வேல்முருகன் நகர் தாமிரபரணி தெருவில், பொது நிலத்தில் பூங்கா அமைப்பது தொடர்பாக குடியிருப்போர் சங்கம், கவுன்சிலர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், கமிஷனர் சித்ரா, முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ விசாரித்தனர். இப்பிரச்னை தொடர்பாக இருதரப்புக்கும் இடையே தகராறு நடக்கிறது. நேற்று முன்தினம் கமிஷனர் சித்ரா முன்னிலையில் வாக்குவாதம் நடந்தது. நேற்று முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூவும் சென்று பிரச்னை குறித்து விசாரித்தார். சங்க நிர்வாகி சோமன்பாபு கூறியதாவது: நடை பாதையாக உள்ள பொது நிலத்தில் தார் ரோடு அமைக்க கவுன்சிலர் அமுதாவிடம் கேட்டதற்கு, அந்நிலத்திற்கு நிதி ஒதுக்க மாட்டார்கள் என்றார். அதில் வார்டு அலுவலகம் கட்ட முயற்சித்ததால், உயர்நீதி மன்றத்தில் தடைபெற்றோம். தற்போது பூங்கா அமைக்க ரூ.10 லட்சம் நிதி பெறப்பட்டுள்ளது. 20 மீ., துாரத்தில் பூங்கா உள்ளதால், நடைபாதைதான் அமைக்க வேண்டும் என்றார். கவுன்சிலர் அமுதா கூறியதாவது: அந்த இடத்தில் டிராவல்ஸ் வாகனங்களை நிறுத்த ஒருவர் பயன்படுத்துகிறார். இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. நிலத்தை பாதுகாக்க வார்டு அலுவலகம் கட்ட பணிதுவங்கியபோது பூங்கா, விளையாட்டு மைதானம், சமூதாயக் கூடம் மட்டுமே அமைக்க வேண்டும் என்றனர். உயர்நீதிமன்ற உத்தரவின்படி கமிஷனரை சந்தித்தோம். அதன்பின் பூங்கா அமைக்க நிதி ஒதுக்கி பணிநடக்கும்போது தகராறு செய்கின்றனர். முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூவை அழைத்து அரசியல் செய்கின்றனர் என்றார். செல்லுார் ராஜூ கூறியதாவது: ஒரு திட்டத்தை அப்பகுதியினர் ஆதரவுடன் நிறைவேற்ற வேண்டும். ஏற்கனவே இங்கு பூங்கா உள்ளது. அதனால் இந்நிலத்தில் பூங்கா தேவையில்லை. தற்போது அந்த இடத்தை அடைத்துள்ளதால் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் செல்ல 250 மீ., சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது, என்றார்.