உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மகளிர் காங்., தலைவர்கள் தன்னிச்சையாக மாற்றம் மாவட்ட தலைவர்கள் அதிருப்தி

மகளிர் காங்., தலைவர்கள் தன்னிச்சையாக மாற்றம் மாவட்ட தலைவர்கள் அதிருப்தி

மதுரை: தமிழக காங்.,கில் மாவட்ட தலைவர்களுக்கு தெரியாமல் 19க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மகளிர் காங்., தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதனால் 'கட்சி நிகழ்ச்சிகளுக்கு அவர்களை அழைக்க மாட்டோம்' என மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளது கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மகளிர் காங்., மாநில தலைவியாக சையத் ஹசினா ஓராண்டுக்கு முன் பதவிக்கு வந்தார். மகளிர் காங்., கலைக்கப்பட்டது. மகளிர் காங்.,கில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடத்த அகில இந்திய தலைமை உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அதிக உறுப்பினர்களை சேர்க்கும் நிர்வாகிகளுக்கு மகளிர் அணியில் தலைவர் பதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. காஞ்சிபுரம், சிதம்பரம், சேலம், வேலுார், திருச்சி, மதுரை, நாகர்கோவில், விருதுநகர் உட்பட 19 மாவட்டங்களில் மகளிர் அணிக்கு புதிய தலைவர்களை சையத்ஹசினா நியமித்துள்ளார். இந்த நியமனங்கள் காங்., மாவட்ட தலைவர்களுக்கு தெரியவில்லை. நிகழ்ச்சிக்கு அழைக்க மாட்டோம் இதனால் அதிருப்தியடைந்த அவர்கள், மகளிர் காங்கிரசார் தன்னிச்சையாக நியமித்த புதிய தலைவர்களை கட்சி நிகழ்ச்சிக்கு அழைக்க மாட்டோம் என போர்க்கொடி துாக்கியுள்ளனர். இதுகுறித்து மாவட்ட தலைவர்கள் கூறியதாவது: கட்சியின் சார்பு அமைப்பு தான் மகளிரணி. புதிய பொறுப்புகள் நியமனங்கள் குறித்து மாவட்ட தலைவர்களிடம் ஆலோசிக்க வேண்டும். ஆனால் தற்போதைய தலைவர் சையத் ஹசினா 77 மாவட்ட தலைவர்களில் ஒருவரை கூட ஆலோசிக்காமல் தன்னிச்சையாக நியமித்துள்ளார். அவர் நியமித்துள்ள தலைவர் யார் என எங்களுக்கே தெரியவில்லை. ஒரு போராட்டத்திலும் பங்கேற்கவில்லை. அதிக உறுப்பினர்கள் சேர்த்தார்கள் என்ற அடிப்படையில் பதவி வழங்கப்பட்டுள்ளது. உறுப்பினர் சேர்க்கையின் உண்மைத் தன்மை எங்களுக்கு தான் தெரியும். புதிதாக நியமிக்கப்பட்டவர்களை வாழ்த்தி ஒட்டிய போஸ்டர்களில் மாவட்ட தலைவர் படம் கூட இடம் பெறவில்லை. கட்சி நிகழ்ச்சிகளுக்கு அவர்களை அழைக்க மாட்டோம். காங்., மாநில தலைமைக்கும் தகவல் தெரிவித்துவிட்டோம் என்றனர். சையத் ஹசினா தரப்பில் கூறுகையில், புதிய உறுப்பினர் சேர்க்கையை முறையாக நடத்தி அதிக உறுப்பினர் சேர்த்தவர்களுக்கு தலைவர் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. புரளி பேசுபவர்கள், வீட்டில் இருந்து அலைபேசியில் அரசியல் செய்பவர்கள், கட்சிப் பணியை சரியாக கவனிக்காதவர் மகளிரணியில் இருந்து களை எடுக்கப்பட்டுள்ளனர். அகில இந்திய தலைமை முடிவின்படி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றனர்.

பணம் இருந்தால் பதவியா

மகளிர் அணியின் மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: பலர் நான்காவது தலைமுறையாக கட்சிக்காக உழைத்துக்கொண்டிருக்கிறோம். தற்போது மகளிர் காங்., செயல்பாடு கார்ப்பரேட் கம்பெனி போல் மாறிவிட்டது. புதிய தலைவர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பு கடிதம், அகில இந்திய தலைமையால் வழங்கப்பட்டது போல் இல்லை. மாநில தலைவி நடைப்பயணம் மேற்கொண்டபோது ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் காங்., தலைவர்கள் தங்கள் நகைளை அடமானம் வைத்து நிகழ்ச்சிக்காக செலவிட்டோம். ஆனால் அவர்கள் கழற்றிவிடப்பட்டனர். இதுகுறித்து அகில இந்திய தலைமைக்கு பல புகார்கள் அனுப்பியுள்ளோம். அதில் மகளிர் காங்.,ல் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளோம். உரிய விசாரணை நடக்கிறது. பணம் இருந்தால் தான் பதவி என்றாகி விட்டது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ