தி.மு.க., கூட்டத்திற்கு ரோட்டை மறைத்து மேடை
சோழவந்தான்: சோழவந்தானில் ரோட்டை மறைத்து தி.மு.க.,வினர் நடத்திய கூட்டத்திற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனர்.இங்கு தி.மு.க.,சார்பில் மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது. எம்.எல்.ஏ.,வெங்கடேசன் வரவேற்றார். இக்கூட்டத்திற்காக அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன் பள்ளப்பட்டி, குருவித்துறை ரோடுகளை மறைத்து மேடை அமைத்திருந்தனர். இதனால் மதியமே அரசு பஸ்கள் 1.5 கி.மீ., முன்பே நிறுத்தப்பட்டன. வாகனங்கள் மாற்று வழியாக சென்றதால் போக்குவரத்து பாதித்தது.மேலும் கிராமத்தினர், அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் பஸ் நிற்குமிடம் தெரியாமல் அவதிப்பட்டனர். பொதுவாகவே இங்கு ஆளுங்கட்சிகள் நாடக மேடை அருகே ரோட்டில் மேடை அமைத்து கூட்டம் நடத்துவதும், மக்களை சிரமப்படுவதும் தொடர்கிறது. இதையே காரணமாகக் ககூறி பிற கட்சிகளும் இங்கு நடத்த அனுமதி பெற்று விடுகின்றனர். இங்கு கூட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.