எங்க ஏரியா உள்ளே வராதே: மதுரை அரசு மருத்துவமனையில் பிற வாகனங்களுக்கு முன், பின் வாசல்களில் அமைக்கப்பட்டது செக் போஸ்ட்
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் அத்துமீறி நிறுத்தப்படும் தனிநபர்களின் டூவீலர், கார்களை தடுத்து நிறுத்தும் வகையில் முன்புறத்தில் போலீஸ் ஸ்டேஷன் அருகிலும், பின்புறத்தில் மார்ச்சுவரியை ஒட்டியும் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது.வெளியூருக்கு செல்பவர்கள் பாதுகாப்பு கருதி மதுரை அரசு மருத்துவமனையின் ஏதாவது ஒரு வார்டு பகுதியில் உள்ள பார்க்கிங் பகுதிகளில் டூவீலர், கார்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இவை சில நேரங்களில் வாரக்கணக்கில் கேட்பாரின்றி நிற்பதோடு வேன், ஆட்டோக்களும் வளாகத்தை ஆக்கிரமித்துள்ளன. இதையடுத்து நோயாளிகள், அவர்களை அழைத்து வரும் உறவினர்களின் டூவீலர்கள் மருத்துவமனை எதிரிலுள்ள சாக்கடை பாலத்தின் மீது நிறுத்துவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதிலும் பாதிபேர் நோயாளி நடந்து செல்ல முடியாது என்று கூறி மருத்துவமனைக்குள்ளேயே நிறுத்துகின்றனர். சிலநேரங்களில் ஆட்டோவில் வந்தாலும் டிரைவர்கள் நோயாளிகளை இறக்கி விட்ட பின் உடனடியாக வெளியேறாமல் அடுத்த சவாரியை வளாகத்திற்குள்ளேயே ஏற்றும் வரை நிற்கின்றனர்.இதனால் மருத்துவமனை வளாகத்திற்குள் மட்டும் நிரந்தரமாக போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் வகையில் முதற்கட்டமாக பணியாளர்கள் அல்லாதோரின் வாகனங்கள் செக்போஸ்ட் தாண்டி வராத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்கிறார் டீன் அருள் சுந்தரேஷ்குமார்.அவர் கூறியதாவது: எம்.பி.பி.எஸ்., முதுநிலை மாணவர்கள் 750 பேர், 600 ஸ்டாப் நர்ஸ்கள், 450 டாக்டர்கள், பிற பணியாளர்களின் டூவீலர்களின் எண்ணிக்கை, கார்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இரு நாட்களில் பணி முடிந்தவுடன் அந்தந்த பிரிவினரை குறிக்கும் வகையில் சிறப்பு ஸ்டிக்கர்கள் வடிவமைக்க திட்டமிட்டுள்ளோம். மார்ச் இறுதிக்குள் இப்பணி முடிந்து விடும். அதுவரை தற்காலிகமாக செக்போஸ்ட் அமைத்து டூவீலர், கார், ஆட்டோவில் செல்பவர்களை கண்காணிக்கிறோம். நடக்க முடியாத நோயாளிகளுக்கு 'பேட்டரி கார்கள்' வழங்க தனியார் நிறுவனங்களை அணுகியுள்ளோம். ஏப். 1 முதல் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றார்.