அன்பு, கருணையின் பாதையில் இருந்து விலகிச் செல்லாதீர்கள் உத்தரகண்ட் தலைமை நீதிபதி அறிவுரை
மதுரை : 'அன்பு, கருணையின் பாதையில் இருந்து விலகிச்செல்லாதீர்கள்' என உத்தரகண்ட் மாநில தலைமை நீதிபதி குகநாதன் நரேந்தர்மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.மதுரை கோச்சடை குயின் மீரா சர்வதேச பள்ளியின் உலக மாணவர்களுக்கான சர்வதேச கீதம் 'யுனிசெப்' அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டதை அடுத்து பள்ளி தலைவர் சந்திரன் தலைமையில் பாராட்டு விழா நடந்தது. உலக மாணவர்கள் நலன் கருதி 'அன்பே எங்கள்பாதை' எனும் மாணவர்களுக்கான கீதத்தை 2021 நவ. 14ல் இப்பள்ளி வெளியிட்டது. பாடலாசிரியர் மதன் கார்க்கி வரிகளில், அனில் ஸ்ரீனிவாசன் இசையில் வெளியான இப்பாடலை பள்ளி நிர்வாக இயக்குனர் அபிநாத் தயாரித்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. பாராட்டு விழாவில் நீதிபதி குகநாதன் நரேந்தர் பேசியதாவது: உடற்கல்வி உடலையும், கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்கள் அறிவையும், அறநெறி, கோட்பாடுகள் ஆன்மாவையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. இவையனைத்தும் பள்ளியில் தான் கிடைக்கும். பள்ளியில் கவனிக்கும், உள்வாங்கும் விஷயங்கள்வாழ்நாள் முழுவதும் பின்தொடரும். இன்று சக மனிதர்கள் மீதான அன்பும் கருணையும் குறைந்து வருகிறது. அன்பு, கருணையின் பாதையில் இருந்து விலகிச் செல்லாமல் அவ்விரு குணநலன்களுடன் வாழ்வதை மாணவர்கள் குறிக்கோளாக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.பள்ளி நிர்வாக இயக்குநர் அபிநாத் பேசுகையில், ''வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வு, வெற்றி தோல்வி, குழு ஒற்றுமை உள்ளிட்டவைகளை விளையாட்டு மட்டுமே கற்றுக்கொடுக்கும். சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட எந்த பாடதிட்டமும் கற்றுத்தராது. வாழ்க்கையில் விளையாட்டு அவசியம். விளையாடினால் படிப்பு கெட்டுவிடும் என்ற தவறான புரிதலை உடைக்க வேண்டும். அதற்கு உதாரணமாக டேக்வாண்டோவில் தங்கம் பெற்ற குகநாதன் நரேந்தர் தற்போது தலைமை நீதிபதியாக உள்ளார்'' என்றார்.உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் சங்கத்தலைவர் ஐசக் மோகன்லால், வழக்கறிஞர் திலீப், முன்னாள் மாணவர் தயாகாந்த் கெவின் ராய், கைரோ இந்தியா நிறுவனர் பாஸ்கல் சசில், மாநில அழைப்பாளர் ஜனா சக்கரவர்த்தி, கல்வி இயக்குநர் சுஜாதா குப்தன், நிர்வாகத் துணை இயக்குனர் ஷீபா பங்கேற்றனர்.