ஊழியர்கள் பற்றாக்குறை முடங்கும் கல்வி அலுவலகம்
திருமங்கலம்: திருமங்கலம் வட்டார கல்வி அலுவலகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் பணிகள் தேக்கமடைகின்றன. திருமங்கலம் தாலுகாவில் வட்டார கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் 280 ஆசிரியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் திருமங்கலம் அலுவலகத்தில் போதிய பணியாளர்கள் இல்லாததாலும், ஓய்வு பெற்றோர், பணி மாறுதல் பெற்றோருக்குப் பதில் வேறு அலுவலர்கள் நியமிக்கப்படாததாலும் கோப்புகள் பலவும் தேங்குகின்றன.மேலும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டாலும், அவர்கள் மாற்றுப் பணியாக வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். இதனால் ஆசிரியர்களின் பண பலன், ஓய்வூதியம், சான்றிதழ் உண்மை தன்மை, விண்ணப்பங்கள் போன்றவை 4 மாதங்களுக்கும் மேலாக தேங்கியுள்ளன. திருமங்கலம் மாவட்ட கல்வி (தொடக்கக்கல்வி) அலுவலக ஓட்டுநர் 4 மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற நிலையில் புதிதாக நியமிக்கப்படாததால் பணிகள் பாதித்துள்ளது. வட்டார கல்வி அலுவலகத்திற்கு தேவையான ஊழியர்களை உடனே நியமிக்க வேண்டும் என ஆசிரியர் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.