உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஈமக்காடு, பாறை ஓவியங்களை தொல்லியல் சின்னமாக்க வேண்டும்

ஈமக்காடு, பாறை ஓவியங்களை தொல்லியல் சின்னமாக்க வேண்டும்

மதுரை: மேலுார் குன்னங்குடிபட்டி ஈமக்காடு, புலிமலை பாறை ஓவியங்கள் உள்ள பகுதிகளை தொல்லியல் சின்னமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். கருங்காலக்குடி ஊராட்சியில் உள்ள குன்னங்குடிபட்டி மலைக்குன்றின் தெற்கு திசையில் 10 ஏக்கர் பரப்பளவில் ஈமக்காடு உள்ளது. குன்னங்குடிபட்டி கற்திட்டை 2018ல் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ் இணையக் கல்வி நுாலக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களால் 'குரங்குபானை' என்று அழைக்கப்படுகிறது என்கிறார் மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை உறுப்பினர் தமிழ்தாசன். அவர் கூறியதாவது: இறந்தவர்களை அல்லது இறந்தவர்களின் எலும்புக்கூடுகளை நீளமான பெரிய கற்களை கொண்டு அடக்கம் செய்யும் பண்பாடு 5000 முதல் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தது. இதை பெருங்கற்காலம் என்பர். அவ்வாறான பெருங்கற்படை சின்னங்கள் குன்னங்குடிபட்டி ஈமக்காட்டில் காணமுடிகிறது. கருங்காலக்குடி பஞ்சபாண்டவர் மலை மாநில தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுவதைப்போல குன்னங்குடிபட்டி ஈமக்காட்டையும் பாதுகாக்க வேண்டும் என கருங்காலக்குடி கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. புலிமலை பாறை ஓவியங்கள் புலிமலை ஊராட்சியில் உள்ள புலிமலையின் உச்சியில் நரிப்புடவு என்னும் குகைத்தளத்தில் சிவப்பு நிற பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. பறவை தலை கொண்ட மனிதன், ஆண், பெண் உருவங்கள், விலங்குகள், குறியீடுகள் போன்ற எண்ணற்ற உருவங்கள் வரையப்பட்டுள்ளன. பேராசிரியை தேவி 2023 ல் இந்த ஓவியத்தை அடையாளம் கண்டு வெளிப்படுத்தினார். இது 5000 முதல் 3000 ஆண்டுகள் பழமையான புதிய இரும்புக்காலத்தை சேர்ந்த ஓவியமாக கருதப்படுகிறது. பெரிய புலி அய்யனார் கோயில் அருகே பாறையில் 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பாண்டியர் கல்வெட்டு ஒன்றும் உள்ளது. இப்பகுதியையும் தொல்லியல் துறையின் கீழ் தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என புலிப்பட்டி கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரையில் ஏற்கனவே உள்ள 18 இடங்களுடன் வரலாற்றை மீட்டெடுக்கும் இவ்விரு பகுதிகளையும் தொல்லியல் சின்னமாக அரசு அறிவிக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ