நெல், வைக்கோல் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்பு
பேரையூர்: பேரையூர் தாலுகா பகுதிகளில் நெல், வைக்கோல் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.இப்பகுதியில் 4 மாதங்களுக்கு முன்பு நெல் பயிரிடப்பட்டு தற்போது நெல் அறுவடை பணி துவங்கி உள்ளது. பேரையூர் தாலுகா, அருகில் உள்ள உசிலம்பட்டி பகுதியிலும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படவில்லை.இதனால் வியாபாரிகளிடம் 72 கிலோ எடையுள்ள நெல் மூடைகளை ரூ.1700 க்கு விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். கடந்தாண்டு ரூ. 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொள்முதல் செய்யப்பட்ட நெல் தற்போது ரூ.1700க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்கள் வயல்களில் வைக்கோல் தேங்கியுள்ளது. இவற்றை கால்நடைகளின் தீவனமாகவும், காளான் வளர்ப்பு உள்ளிட்ட தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை இயந்திரம் மூலம் கட்டி எடுத்து, குறிப்பிட்ட எடையுள்ள கட்டுகளாக்கி கேரளா, கர்நாடகா பகுதி வியாபாரிகளுக்கு விற்கின்றனர். கடந்தாண்டு நெல் அறுவடை நேரத்தில் ஒரு கட்டு வைக்கோல் ரூ.80க்கு வாங்கப்பட்டது. தற்போது கட்டு ரூ.40க்குதான் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனாலும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலையில் உள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது: ஆற்றுப் பாசன பகுதியில் அரசு நெல்கொள் முதல் நிலையம் அமைக்கின்றனர். பேரையூர் மற்றும் உசிலம்பட்டி தாலுகாவிற்கு செல்லம்பட்டியில் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து துாரம் அதிகம் என்பதால் நெல்லை அங்கு கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் உள்ளூர் வியாபாரிகளிடம் நஷ்டத்தில் விற்கிறோம். வைக்கோலும் விலை குறைவாக உள்ளதால் கடுமையாக பாதித்துள்ளோம் என்றனர்.