உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மழை இல்லாததால் நடவு செய்ய தயங்கும் விவசாயிகள் நெல் நாற்றுகள் தயார்

மழை இல்லாததால் நடவு செய்ய தயங்கும் விவசாயிகள் நெல் நாற்றுகள் தயார்

திருப்பரங்குன்றம்: : திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள மானாவாரி பகுதிகளில் இயந்திரம் மூலம் நடவு செய்வதற்கு நெல் நாற்றுகள் தயாராகி விட்டன. மழையை எதிர்நோக்கி ஏராளமான விவசாயிகள் காத்திருக்கின்றனர். தென்பழஞ்சி விவசாயி சிவராமன் கூறியதாவது: போதிய மழை பெய்யுமா என்ற சந்தேகத்தில் இயந்திர நடவு செய்யலாம் என கிணறுகள், ஆழ்குழாய்களில் தண்ணீர் இருக்கும் விவசாயிகள் மட்டும் 20 நாட்களுக்கு முன்பு நாற்று பாவினர். தற்போது நடவுக்கு நாற்றுகள் தயாராகி விட்டன. ஆனால் தென்பழஞ்சி உள்பட மானாவாரி பகுதிகளில் மழை துவங்கவில்லை. கிணறுகள், ஆழ்குழாய்களில் போதுமான தண்ணீர் இருப்பவர்கள் மட்டும் நெல் நாற்றுகளை நடவு செய்து வருகின்றனர். குறைந்த அளவு தண்ணீர் உள்ள விவசாயிகள் ஒரு பகுதியில் மட்டும் நடவு செய்துள்ளனர். மீதமுள்ள நாற்றுகள் காத்திருக்கின்றன. நாற்றுப் பாவிய 25 நாட்களுக்குள் நடவு செய்து விட வேண்டும். இல்லையென்றால் நாற்றுகள் முற்றிவிடும். அவற்றை கால்நடைகளுக்கு தீவனமாகத்தான் பயன்படுத்த முடியும். மதுரை நகர், திருப்பரங்குன்றம் வரை நல்ல மழை பெய்கிறது. ஆனால் தென்பழஞ்சி பகுதிகளில் துாறலுடன் நின்று விடுகிறது. பத்து நாட்களுக்குள் மழை துவங்கினால் மட்டுமே பணிகளை துவக்க முடியும். நடவு செய்தபின்பு மழை பெய்யாவிடில் நட்ட நாற்றுகள் கருகி வீணாகும். தென்பழஞ்சி கண்மாய் உள்பட சுற்றியுள்ள மானாவாரி கண்மாய்களுக்கு வைகை அணை தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லை என்றால் விவசாயம் முற்றிலும் தடைபட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதுடன், அவர்கள் நிலங்களை விற்கும் நிலை ஏற்பட்டு விடும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை