உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின்சார திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்; விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை

மின்சார திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்; விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை

மதுரை: விவசாயிகளை பாதிக்கும் மின்சார திருத்த மசோதா - 2025 யை மத்திய அரசு திரும்பப் பெறும் வகையில் தமிழக அரசு அழுத்தம் தர வேண்டுமென தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு 2020 ல் ஐந்து மின்சார திருத்த மசோதாக்களை அறிமுகப்படுத்தியபோது விவசாயிகள், விசைத்தறியாளர்கள், குறு, சிறு தொழில்முனைவோர் பாதிக்கப்படுவர் என்பதால் மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் அச்சட்டம் கைவிடப்பட்டது. மீண்டும் மின்சார திருத்த மசோதா - 2025 யை அறிமுகப்படுத்திய மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளின் கருத்துக்களையும் கேட்டுள்ளது. இந்த மின்சார திருத்த மசோதாவின் மூலமாக இடை மானியங்களான (கிராஸ் சப்சிடி) வேளாண் உரிமை மின்சார இணைப்புகள், வீடுகளுக்கான 100 யூனிட் மின்சார கட்டண சலுகை, விசைத்தறிகளுக்கான 750 யூனிட் மின்சார கட்டண சலுகைகளை ரத்து செய்ய பரிந்துரைத்துள்ளது. எனவே இம்மசோதாவை திரும்பப் பெற மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தெரிவித்தார். அவர் கூறியதாவது: தமிழகத்தில் 23.5 லட்சம் விவசாயிகள் வேளாண் உரிமை மின்இணைப்பு பெற்றுள்ளனர். 4 லட்சம் விவசாயிகள் மின்இணைப்பு கேட்டு 15 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் 23 லட்சம் விவசாயக் குடும்பம், நான்கு லட்சம் விசைத்தறியாளர் குடும்பங்களை நேரடியாக பாதிக்கும் வகையில் இந்த மசோதா அமைந்துள்ளது. நிலுவையில் உள்ள ரூ.6.9 லட்சம் கோடி மின்கட்டணத்தை வசூலிப்பதற்காக, தற்போதுள்ள கட்டணத்தை 80 சதவீதம் உயர்த்தி நிர்ணயிக்க வேண்டுமென புதிய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உருவாக்கப்பட்ட மின்பாதைகளை பயன்படுத்தி தனியார் மின் நிறுவனங்கள் மின்வணிகத்தில் ஈடுபடும் என்பதையும் தெரிவிக்கிறது. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் தமிழக விவசாயிகள் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை ரூ.20 ஆயிரம் வரை மின்கட்டணம் செலுத்த வேண்டி வரும். விவசாயிகளுக்கும் விசைத்தறியாளர்களுக்கும் கொடுக்கப்படும் மின்சாரத்திற்கான கட்டணத்தை தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்குவதால் மின்வாரியத்திற்கு சுமையும், கடனும் இல்லை. மத்திய அரசு நெருக்கடி மத்திய அரசின் நெருக்கடி காரணமாக மாநில அரசுகள் சொந்தமாக மின் தயாரிப்பை கைவிட்டு, அதைவிட இரண்டு மடங்கு அதிக விலை கொடுத்து தனியாரிடம் மின்சாரத்தை வாங்க நிர்பந்திக்கப்படுவதால் தான் மாநில மின்வாரியங்கள் கடனில் இயங்குகின்றன. உற்பத்தி செலவு அதிகம் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் விவசாய பொருட்களுக்கான உற்பத்தி செலவு அதிகமாக உள்ள நிலையில் வேளாண் மின்கட்டணத்தையும் விவசாயிகள் செலுத்த நேரிட்டால் விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டியது தான். பிரதமர் மோடி இப்பிரச்னையில் தலையிட்டு மின்சார சட்ட திருத்த மசோதா - 2025 யை திரும்ப பெற வேண்டும். அதற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி