அமராவதியில் விமான நிலையம் அமைக்க 36,000 ஏக்கர் நிலம் தர விவசாயிகள் தயார்
அமராவதி: ஆந்திராவின் பசுமை தலைநகரான அமராவதியில் சர்வதேச விமான நிலையம், தொழிற்சாலைகள் மற்றும் விளையாட்டு நகரம் அமைக்க 36,000 ஏக்கர் நிலத்தை தர விவசாயிகள் முன்வந்துள்ளதாக நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் நாராயணா தெரிவித்தார்.ஆந்திராவின் மங்களகிரி, தடேபள்ளி, குண்டூர், விஜயவாடா ஆகியவற்றை அமராவதியுடன் இணைத்து 'மெகா சிட்டி' அமைக்கப்படும் என கடந்த ஏப்.,15ல் முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்தார். இந்நிலையில் தலைநகர் பிராந்திய மேம்பாட்டு ஆணைய கூட்டம் முதல்வர் சந்திரபாபு தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது அமராவதியில் 3673 கோடி செலவில் ஐந்து நிர்வாக கட்டடங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இது குறித்து மாநில நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் நாராயணா தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:ஹைதராபாதின் ஷம்ஷாபாத் விமான நிலையத்தை போன்று அமராவதியில் சர்வதேச விமானநிலையத்தை 5,000 ஏக்கரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர தலா 2,500 ஏக்கரில், ஸ்மார்ட் தொழிற்சாலைகள் மற்றும் விளையாட்டு நகரை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, நிலத்தை கையகப்படுத்துவதா அல்லது நிலத்தை திரட்டுவதா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இது குறித்து விவசாயிகளிடம் கருத்துக்களை பெற கிராம அளவில் கூட்டம் நடத்தப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக ஏற்கனவே 54,000 ஏக்கர் நிலம் அரசிடம் உள்ளது. இது முழுமையாக பயன்படுத்தப்படாத நிலையில், மேலும் 36,000 ஏக்கர் நிலத்தை இரண்டாம் கட்டமாக வழங்க விவசாயிகள் முன்வந்துள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.