அரசு மருத்துவமனையில் காய்ச்சல் வார்டு தயார்
மதுரை: மதுரையில் நேற்று காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 13 பேர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.மதுரை அரசு மருத்துவமனையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 43 பேர் நேற்று காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றனர். இதில் 12 பேர் குழந்தைகள் நலவார்டிலும், 18 பேர் காய்ச்சல் வார்டிலும் அனுமதிக்கப்பட்டனர். இங்கு ஏற்கனவே 30 படுக்கைகளுடன் கூடிய காய்ச்சல் வார்டு தயார் நிலையில் உள்ளதாக டீன் அருள் சுந்தரேஷ்குமார் தெரிவித்தார்.சுகாதாரத்துறை கணக்கெடுப்பின் படி மதுரை மாவட்டத்தில் நேற்று 5 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தை உட்பட புதிதாக 13 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். டெங்கு காய்ச்சல் பதிவாகவில்லை. இதுதவிர வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்கும் வகையில் மதுரை விமான நிலையில் தொடர்ந்து காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகிறது.பயணிகள் வெளியே வரும் பகுதியில் உள்ள 3 சிறப்பு கேமராக்கள் மூலம் பயணிகளுக்கு காய்ச்சல் இருந்தால் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்படுவர்.இதுவரை காய்ச்சலுக்கு யாரும் தனிமைப்படுத்தவில்லை. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் மதுரையில் யாரும் பாதிப்புக்குள்ளாகவில்லை. கொரோனா வைரஸ் உறுதி செய்வதற்கான சளி பரிசோதனை இதுவரை தொடங்கப்படவில்லை.