மேலும் செய்திகள்
பதில் மனு தாமதம்; உயர்நீதிமன்றம் அபராதம்
03-Oct-2025
மதுரை: திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டாசுக் கடை நடத்த உரிமம் வழங்குவதற்கு எதிராக ஊகங்கள் மற்றும் அனுமானங்கள் அடிப்படையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்த மனுதாரருக்கு ரூ.2500 அபராதம் விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி துளசிராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு: பட்டாசு கடை நடத்த உரிமம் கோரி மதுரை மாவட்டம் கோட்டையூரை சேர்ந்த பிரவீன் குமார் விண்ணப்பித்துள்ளார். அனுமதி வழங்க ஆட்சேபித்து வெடி பொருள் தலைமை கட்டுப்பாட்டாளர், திண்டுக்கல் கலெக்டர், நிலக்கோட்டை ஆர்.டி.ஓ., போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஆர்.பூர்ணிமா அமர்வு பிறப்பித்த உத்தரவு: பட்டாசுக் கடை அமைக்க நிரந்தர உரிமம் கோரி விண்ணப்பித்தவருக்கு அனுமதி வழங்கப்படலாம் என்ற அச்சத்தின் பேரில் மனுதாரர் இப்பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். உரிமம் பெறும் எதிர்பார்ப்பில், கடைக் குரிய கட்டுமானம் எழுப்பத் துவங்கியுள்ளதை கண்டறிந்ததால் மனுதாரர் இந்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அரசு பிளீடர் திலக் குமார், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ரவி, 'விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது. சட்டப்படி பரிசீலிக்கப்படும்' என தெரிவித்தனர். இம்மனு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது ஊகங்கள் மற்றும் அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டது. மாநில அரசின் அதிகாரிகள் சட்டப்படி செயல்படுவர். இம்மனு நிலைக்கத்தக்கதல்ல; தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ரூ.2500 அபராதம் விதிக்கப்படுகிறது. இதை சென்னையிலுள்ள மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு செலுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
03-Oct-2025