விளம்பர வெளிச்சத்தில் நாடகம் நடத்தும் முதல்வர் முன்னாள் அமைச்சர் உதயகுமார் விமர்சனம்
உசிலம்பட்டி: 'விளம்பர வெளிச்சத்தில் முதல்வர் ஸ்டாலின் நாடகம் நடத்துகிறார். அதிகாரம் இருக்கும் வரையே விளம்பர வெளிச்சம் இருக்கும்' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறினார். அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியின் 'மக்களைக்காப்போம்; தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தில் உசிலம்பட்டி திருமங்கலம் விலக்கு அருகே செப். 4 ல், அவர் பேச உள்ளார். அந்த இடத்தை, உதயக்குமார் தலைமையில் அ.தி.மு.க.,வினர் ஆய்வு செய்தனர். அவர் கூறியதாவது: அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி இது வரை சென்ற 115 தொகுதிகளிலும் அ.தி.மு.க., ஆட்சி மலரும் வகையில் எழுச்சிப் பயணமாக அமைந்துள்ளது. அதேபோல் மதுரையிலும் முத்திரை பதிக்கும் வகையில் அமையும். முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே வெளிநாட்டிற்கு சென்று வரும் போதெல்லாம் வெறும் கையோடு திரும்பி வருவதாகவே உள்ளது. முதலீடுகளை ஈர்க்க நாளை (இன்று) வெளிநாடு செல்லும் பயணமும் சுற்றுப் பயணமாக அமையுமா அல்லது வெற்றுப் பயணமாக இருக்குமா என்பது அவர் வந்த பின்பே தெரியும். இங்கு உள்ள நிறுவனத்தை துபாய்க்கு அழைத்துச் சென்று அங்கு ஒப்பந்தம் போடுவதாக செய்திகள் வருகின்றன. இங்குள்ள முதலீட்டாளர்களுக்கே சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அமெரிக்கா வரிவிதிப்பு முறைகளாள் உற்பத்தி பொருட்கள் பாதி தேக்கமடைந்து கிடக்கிறது. திருப்பூரில் ஏற்றுமதியே இல்லை. இது எல்லாம் முதலமைச்சருக்கு நன்றாகத் தெரியும். இதற்கு எப்படி தீர்வு காண்பது என்பதற்கு அவரிடம் எந்த பதிலும் இல்லை. விளம்பர வெளிச்சத்தில் நாடகம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அதிகாரம் இருக்கும் வரை விளம்பர வெளிச்சம் இருக்கும். அதிகாரம் போய்விட்டால் உண்மை முகம் தெரிந்துவிடும். அதற்கான காலம் கனிந்து வருகிறது என்றார்.