முதல்வர் ஸ்டாலினை சந்தித்த முன்னாள் மண்டல தலைவர்கள்
மதுரை: மதுரை மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர்கள் சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மீண்டும் பதவி வழங்க வலியுறுத்தினர். மதுரை மாநகராட்சியில் சொத்துவரி முறைகேடு விவகாரம் பூதாகரமாகியது. இதனால் ஆளுங்கட்சிக்கு ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி மேயர், 5 மண்டல தலைவர்கள், 2 நிலைக் குழுத் தலைவர்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். தவிர இவ்வழக்கு விசாரணை தொடர்ந்து நடக்கிறது. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் விமர்சனம், வரும் சட்டசபை தேர்தலையொட்டி புதிய மேயரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மண்டலத் தலைவர் பதவியை இழந்த சரவணபுவனேஸ்வரி, முகேஷ் சர்மா, சுவிதா ஆகியோர் கட்சி தலைமை அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மனு அளித்தனர். அப்போது 'சொத்துவரி முறைகேட்டிற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. மீண்டும் பதவி வழங்க பரிசீலிக்க வேண்டும்' என வலியுறுத்தினர்.