உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நில அபகரிப்பு: மதுரை தி.மு.க., செயலாளர் தளபதி, சுரேஷ்பாபு உட்பட 4 பேர் கைது

நில அபகரிப்பு: மதுரை தி.மு.க., செயலாளர் தளபதி, சுரேஷ்பாபு உட்பட 4 பேர் கைது

மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நில அபகரிப்பு புகார் தொடர்பாக தி.மு.க., நகர் செயலாளர் தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு, திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கொடிசந்திரசேகர் உட்பட நான்குபேரை நேற்று போலீசார் கைது செய்தனர். திருமங்கலம் அருகே வேங்கடசமுத்திரத்தை சேர்ந்தவர் சிவனாண்டி. மனைவி பாப்பா. இவர்களுக்கு திருமங்கலம் அருகே செங்குளத்தில் 5.14 ஏக்கர் நிலம் இருந்தது. இவர்கள் அஸ்ரா கார்க் எஸ்.பி..,யிடம் ஜூலை 13 ல் அளித்த மனு: உசிலம்பட்டி ஆதி திராவிடர் நலத்துறை தாசில்தார் மாணிக்கமும், வேறு ஒருவரும் மதுரையில் சுரேஷ்பாபு அலுவலகத்தில் வைத்து, நிலத்தை தங்களுக்கு பதிவு செய்து கொடுக்குமாறு மிரட்டினர். தி.மு.க.,வைச் சேர்ந்த கிருஷ்ணசாமி பெயரில் பவர் பத்திரம் தயாரித்து, வலுக்கட்டாயமாக 40 லட்சம் ரூபாய் கொடுத்தனர். பல கோடி மதிப்புள்ள சொத்தை, மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. முன்ஜாமின் கோரி தி.மு.க.,மதுரை நகர் செயலாளர் தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ் பாபு (பொட்டு சுரேஷ்), திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கொடி சந்திரசேகர், சேதுராமன் முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதை கோர்ட் தள்ளுபடி செய்தது. மதுரை ஐகோர்ட் கிளையில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் மற்றும் தாசில்தார் மாணிக்கம் நேரில் ஆஜராக எஸ்.பி.,அலுவலகம் சம்மன் அனுப்பியது. தளபதி, சுரேஷ்பாபு, கொடிசந்திரசேகர் நேற்று எஸ்.பி.,அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் நேற்றிரவு வரை எஸ்.பி.,- ஏ.டி.எஸ்.பி.,மயில்வாகனன் விசாரணை நடத்தினர்.தளபதி, சுரேஷ்பாபு, கொடிசந்திரசேகர், திருப்பரங்குன்றம் தி.மு.க.,நகர் செயலாளர் கிருஷ்ணபாண்டியனை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது ஐ.பி.சி., 406 (நம்பிக்கை மோசடி), 420 ( மோசடி) 506/2 ( ஆயுதங்களை காட்டி மிரட்டல்), 387( அச்சுறுத்துதல்) உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அஸ்ரா கார்க் எஸ்.பி.,கூறியதாவது: இவர்கள் மீது புகார் கொடுத்த உடன் அவசரமாக வழக்குப் பதிவு செய்யவில்லை. ஆவணங்களை ஆய்வு செய்த பின்னரே வழக்கு பதிவு செய்தோம். முதற்கட்ட விசாரணையில் இவர்கள் நான்கு பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். மேலும் பலருக்கு தொடர்பு உள்ளது. இது அரசியல் ரீதியான நடவடிக்கை இல்லை என்றார். நான்கு பேரும் பாளையங்கோட்டை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை