இன்று முதல் கோவில்பட்டியில் நெல்லை வந்தே பாரத் நிற்கும்
மதுரை : திருநெல்வேலி - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், இன்று (அக்., 9) முதல் சோதனை அடிப்படையில் கோவில்பட்டியில் 2 நிமிடங்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு தலா 20 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் திருநெல்வேலி ரயில் விருதுநகரிலும், நாகர்கோவில் ரயில் கோவில்பட்டியிலும் நின்று செல்கின்றன. இந்நிலையில், நெல்லை வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல பயணிகளிடத்தில் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து இன்று முதல் எழும்பூர் செல்லும் ரயில் (20666) காலை 6:38 மணிக்கும், நெல்லை செல்லும் ரயில் (20665) இரவு 9:23 மணிக்கும் கோவில்பட்டி வந்து 2 நிமிடங்கள் நின்று செல்லவுள்ளன. நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் விருதுநகரில் நின்று செல்ல சிவகாசி, ராஜபாளையம் பகுதி பயணிகள் எதிர்ப்பார்க்கின்றனர். இதனால் அவர்களுக்கு சென்னை வந்து செல்ல கூடுதல் வந்தே பாரத் வசதி விருதுநகரில் இருந்து கிடைக்கும். நேர மாற்றம் டிச.,7 முதல் எழும்பூர் செல்லும் வந்தே பாரத் ரயில் (20666), திருநெல்வேலியில் இருந்து காலை 6:05க்கு பதிலாக 6:00 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.