உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பலன் தரும் பசுந்தாள் உர சாகுபடி

பலன் தரும் பசுந்தாள் உர சாகுபடி

மதுரை; பசுந்தாள் உர பயிர்களை சாகுபடி செய்து மண் வளத்தை காக்கலாம் என விநாயகபுரம் நீர் மேலாண்மை பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் கமலாலெட்சுமி தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: நிலையான பயிர் உற்பத்திக்கு பசுந்தாள் உரப்பயிர்களை சுழற்சி முறையில் சாகுபடி செய்ய வேண்டும். பயிர்களுக்கு தேவையான தழைச்சத்தினை சணப்பை, புங்கம், நுணா, பூவரசு, பில்லிபயறு, கொத்தவரை, அகத்தி, ஆடாதொடா பசுந்தாள் உரங்கள் மண்ணில் சேர்க்கின்றன. கொளுஞ்சி, சணப்பை, தக்கைபூண்டு செடிகளை பயிரிடுவதற்கு முன் வளர்ப்பதன் மூலம் மண் அரிப்பு, களை வளர்ச்சியைத் தடுத்து மண்ணில் கரிமச்சத்தைப் பெருக்கி கனிம நைட்ரஜன் உரத்தை நிலையான பயன்பாட்டு விகிதத்தில் முழுமையாக மாற்றுகின்றன. பசுந்தாள் உரப்பயிர்கள் வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை கிரகித்து வேர்ப்பகுதியில் சிறு முடிச்சுகள் மூலம் நிலைநிறுத்தி பயிரின் தழைச்சத்து உரத்தேவையை பூர்த்தி செய்கின்றன.சணப்பூவில் கோ 1, கொழிஞ்சியில் எம்.டி.யு.1, மணிலா, அகத்தியில் கோ 1 சிறந்த ரகங்களாகும். பசுந்தாள் உற்பத்திக்கு ஏக்கருக்கு 10 கிலோ சணப்பூ, 20 கிலோ தக்கைப்பூண்டு, 15 கிலோ மணிலா அகத்தி, 8 கிலோ கொழிஞ்சி விதை போதுமானது. மணல் தரை நிலம், குறுமண்நிலம், களிமண் நிலம், வண்டல் மண் நிலத்திற்கு சீமை அகத்தி (செஸ்பேனியா) ஏற்றது. களர், உவர் நிலத்தை சரிசெய்ய தக்கைப்பூண்டு பயிரிடலாம். ஏக்கருக்கு 8000 கிலோ வரை பசுந்தாள் கிடைக்கும்.பயிர் நடவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன் இதை விதைத்து 30 முதல் 45 நாட்களுக்குள் மடக்கி உழ வேண்டும். இதன் மூலம் ஏக்கருக்கு 20 சதவீதம் வரை ரசாயன உரச்செலவு குறையும். மண்ணின் நீர்தேக்கும் தன்மை அதிகரித்து 15 முதல் 20 சதவீதம் வரை பயிர் விளைச்சல் அதிகரிக்கும். மண்புழுக்களின் எண்ணிக்கை பெருகும், பூச்சி, நோய் பரவுவது தடுக்கப்படுகிறது. நன்மை செய்யும் பூச்சிகளை கவர்ந்து ஈர்க்கின்றன. மானிய விலையில் விதைகளைப் பெற அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுகலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ