| ADDED : மார் 16, 2024 07:41 AM
திருப்பரங்குன்றம்: ''தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதுடன், எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்கப்படுகிறது'' என அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா குற்றம் சாட்டினார். திருப்பரங்குன்றத்தில் அவர் கூறியதாவது: அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமிக்கு 70 சதவீத மக்கள் ஆதரவு உள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தனியாக களம் கண்டு வென்றனர்.இன்று சிறு கட்சிகள் எல்லாம் அ.தி.மு.க., வுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.அண்ணாத்துரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சிறு கட்சிகளை கூட்டணி அமைத்து மாபெரும் வெற்றி அடைந்தனர், அதேபோல் பழனிசாமியும் இந்த தேர்தலில் வெற்றி பெறுவார். பா.ம.க., ம.தி.மு.க, போன்ற கட்சிகளுக்கு சின்னத்தை தக்கவைக்க உதவியது அ.தி.மு.க., தான். அதேபோல் தே.மு.தி.க., வுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றுத் தந்ததும் அ.தி.மு.க., தான். இன்று பம்பரம் சுழலுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி மீது, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துஉள்ளார். இதன் மூலம் அண்ணாமலை தலைமை பதவிக்கு தகுதி இழந்துவிட்டார்.அவர் பெயருக்கு ஏற்ற மாதிரி அண்ணாமலை என்பது போல் இல்லை. அவர் கூறியதற்கு அவரே தவறை உணர்ந்து கொள்ளும் நிலை வரும். பழனிசாமி மீது விமர்சனம் செய்திருப்பது ஒரு தவறான நடைமுறை. அண்ணாமலைக்கு அ.தி.மு.க., மட்டுமின்றி, மக்களும் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்கப்படுகிறது. டாஸ் மாக் கடைகள் மறைமுகமாக அதிகரித்து விட்டன, என்றார்.