உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருப்பரங்குன்றம் தீர்த்தங்களில் திருப்பணி எப்போது புதுப்பொலிவு பெற அரசு நடவடிக்கை தேவை

திருப்பரங்குன்றம் தீர்த்தங்களில் திருப்பணி எப்போது புதுப்பொலிவு பெற அரசு நடவடிக்கை தேவை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 16ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதையொட்டி பாலாலயம் நடத்தப்பட்டு, திருப்பணிகள் துவங்கிவிட்டன. அறுபடை வீடுகளில் முதன்மை வீடான திருப்பரங்குன்றத்தில் 14 புனித தீர்த்தங்கள் உள்ளன. கோயில் அபிஷேகம், வழிபாடுகளுக்கு பயன்படும் இவை பக்தர்களின் உடல், மனப்பிணிகளை போக்கும் என நம்பப்படுகிறது. தீர்த்தங்கள் வருமாறு:

லட்சுமி தீர்த்தம்

கோயில் திருவாட்சி மண்டபத்தின் கிழக்கில் 2 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்குள்ள மீன்களுக்கு உப்பு, பொரி வழங்கி நீரைப் பருகினால் தோல் வியாதிகள், பருக்கள் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

சரவணப் பொய்கை

மலையின் அடிவாரத்தில் 4 ஏக்கர் பரப்பில் பொய்கை புஷ்கரணி அமைந்துள்ளது. முருகனின்வேலால் உருவான இப்பொய்கையில் நீராடி வழிபட்டால், பாவங்கள் நீங்கி புண்ணியம் உண்டாகும். தினமும் இங்கிருந்து எடுத்துச் செல்லப்படும் நீர் அபிஷேகத்திற்கு பயன்படுகிறது. இதனருகே நக்கீரர் குகை உள்ளது.

காசிதீர்த்தம்

சிவனுடன் வாதம் செய்த நக்கீரர் பாவம் நீங்க தவம் செய்தார். அருகில் இருந்த குளத்தில் இலை ஒன்று பாதி மீனாகவும், பாதி பறவையாகவும் காட்சியளித்தது. இதைக் கண்டு அதிசயித்த நக்கீரர் தவம் கலைந்தது. சிவவழிபாட்டில் தவறிய 999 பேரை சிறைப்பிடித்த பூதம், நக்கீரரையும் சிறைப்பிடித்தது. நக்கீரர் திருமுருகாற்றுப்படையை பாடியதால், அங்கு தோன்றிய முருகன் பூதத்தை சம்ஹாரம் செய்து அனைவரையும் விடுவித்தான். பூதம் தீண்டியதால் புனித கங்கையில் நீராட நக்கீரர் விரும்பினார். அதையறிந்து முருகன் பாறையில் வேலை ஊன்றி கங்கை நீரை பொங்கச் செய்தான். நக்கீரர் பாவம் நீங்கினார். பாறைகளுக்கு இடையே இன்றும் வற்றாத நீருடன் இது விளங்குகிறது.

புத்திர தீர்த்தம்

திருப்பரங்குன்றம் மலையின் வாயு மேடையில் புத்திர தீர்த்தம் உள்ளது.குழந்தை பேறு இல்லாதோர் இங்கு நீராடினால் கைமேல் பலனுண்டு. இதை உள்ளூர் மக்கள் சோத்துக்கடை கிணறு என்கின்றனர்.

சத்திய தீர்த்தம்

கோயிலின் வடதிசையில் உள்ளது. இங்குதான் கோயில் சார்பில் தெப்பத்திருவிழா தைக் கார்திகை திருவிழா என்ற பெயரில் சிறப்பாக கொண்டாடப்படும்.

பால்சுனை

குன்றத்து மலையின் பின்புறம் பால்சுனை கண்ட சிவபெருமான் கோயில் உள்ளது. இதனருகே மலையில் இருந்து பால் போன்ற வெண்மை நிறத்தில் நீரூற்று சுனையாக உள்ளது. இதனை அருந்தி சிவனை வழிபட்டால் நாள்பட்ட தீராத வியாதிகள் சில நாட்களிலேயே சரியாகிவிடும் என்கின்றனர்.

புஷ்பதார்தவத் தீர்த்தம்

மலையின் ஈசான மூலையில் உள்ள இத்தீர்த்தம்,அகலிகைக்கு சாபவிமோசனம் நீக்கி உண்மை உருவத்தை கொடுத்தது என நம்பப்படுகிறது.

வைத்தியன் கிணறு

திருப்பரங்குன்றம் மக்களால் இவ்வாறு அழைக்கப்படும் தீர்த்தம், உடல் நோயையும், மனநோயையும் அறவே நீக்கவல்லது என்று நம்புகின்றனர்.

வைத்திய ஹஷார தீர்த்தம்

ஈசன் திருவடி தேடி திருமால் நீராடிய சிறப்பு பெற்றது இத்தீர்த்தம்.

பிரம்ம தீர்த்தம்

கோயிலின் உட்பகுதியில் உள்ள இத்தீர்த்தம் சர்வ நோய்களையும் நிவர்த்த செய்யும் வல்லமை கொண்டது. வரலாற்று நுால்களில் ஞானதீர்த்தம் எனப்படுகிறது. இது தற்போது அபிஷேகத்திற்கும் பயன்படுகிறது. உள்ளூர் பக்தர்கள் இதை சன்னாசி கிணறு என்கின்றனர்.

கல்யாண தீர்த்தம்

மலையின் வடக்கு திசையில் சன்னதி தெருவில் உள்ளது இத்தீர்த்தம். சுவாமியின் திருக்கல்யாண நேரத்தில் பக்தர்கள் விரதமிருந்து இத்தீர்த்தத்தில் நீராடி சுவாமியை தரிசனம் செய்வர். மேலும் பாண்டவர்களால் உருவான பாண்டவர் தீர்த்தம், மலையின் வடபுறம் மண்டல தீர்த்தம், கோயிலின் முன்பகுதியில் ஈசான மூலையில் ஸிந்த தீர்த்தம் என 14 தீர்த்தங்கள் உள்ளன.

புதுப்பொலிவு பெறுமா

சமூக ஆர்வலர் ஆர்.ராஜேந்திரன் கூறியதாவது: பல நுாற்றாண்டு வரலாற்று சிறப்பும், சங்க இலக்கியங்களில் பாடல் பெற்றதுமான இத்தீர்த்தங்கள், பக்தர்களுக்கு உடல், மனநலம் அளித்து வந்துஉள்ளன. பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இன்றி அவற்றின் முக்கியத்துவம் மறைந்து விட்டது. இவை அனைத்தும் இன்றுவரை பராமரிப்பு இன்றியே உள்ளன.சில தீர்த்தங்கள் ஆக்கிரமிப்புக்குள்ளாகி, இருப்பதற்கான அடையாளமே இல்லாமல் உள்ளன. உள்ளூர் பக்தர்களுக்கே பல தீர்த்தங்களின் இருப்பிடம் தெரியவில்லை.கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில் இத்தீர்த்தங்கள் புதுப்பொலிவு பெற ஹிந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேஸ்வரத்தில் உள்ள புனித தீர்த்தங்களைப் போல இவற்றையும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்என்பதே பக்தர்களின் ஏக்கமாக உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை