தமிழகத்தில் கொத்தடிமை கூலி நியமனங்கள் அரசு ஊழியர் சங்கம் கடும் விமர்சனம்
மதுரை: தமிழகத்தில் கொத்தடிமை கூலி நியமனங்களாக தொகுப்பூதியம், மதிப்பூதியம், அவுட்சோர்ஸிங் என பலவகை நியமனங்களையும் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி இன்று மாநிலம் முழுவதும் அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். சங்க மாநில தலைவர் சீனிவாசன், பொதுச் செயலாளர் பாஸ்கரன் கூறியிருப்பதாவது: தமிழக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் சமூகநீதி காத்திடும் அரசு என்கிறது. சமூகநீதி என்பது கல்வி, பொருளாதாரத்தில் முன்னேறினால் சாத்தியமாகிறது. ஆனால் அரசு தொகுப்பூதிய முறைகளை அமல்படுத்துவதுடன், கான்ட்ராக்ட், அவுட்சோர்ஸிங் என கொத்தடிமை கூலிமுறைகளை தொடர்ந்து அமல்படுத்துகிறது. மருத்துவத் துறையில் அரசாணை 300ன்படி நிரந்தர பணியிடங்களை சரண்டர் செய்து, ரூ.8500 ஊதியத்தில் 4 ஆயிரம் காலியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. பல்நோக்கு பணியாளர்கள் உத்தரவாதம் இன்றி பணியாற்றுகின்றனர். நில அளவைத் துறையில் தற்காலிக உரிமம் வழங்கப்பட்ட சர்வேயர்கள் 350 பணியிடங்களில் ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் ஓராண்டுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு போராட்டங்களுக்கு பின்பும் சத்துணவுத் துறையில் ரூ.3 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 8997 பேர் நியமிக்கப்பட உள்ளனர். வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையில் ரூ.28 ஆயிரம் சம்பளத்தில் புதிதாக நியமனம் செய்யப்படுகின்றனர். அரசு ஐ.டி.ஐ.,க்களில் பயிற்றுனர்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்வது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாகும். இதுபோன்ற நியமனங்களை அரசு திரும்பப் பெற வேண்டும். தேர்தல் கால வாக்குறுதிபடி தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம், மதிப்பூதியம், அவுட்சோர்ஸிங், பல்நோக்கு மருத்துவ பணியாளர் உட்பட அனைவருக்கும் காலமுறை ஊதியத்துடன் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். இதற்காக இன்று (ஆக.,8) தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு கூறினார்.