நிலத்தை முறைப்படுத்தி பட்டா வழங்குவதில் அரசு ஊழியரையும் பரிசீலிக்க வேண்டும் பதவி உயர்வு வருவாய் அலுவலர்கள் வலியுறுத்தல்
மதுரை: நகர் பகுதியில் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆக்கிரமித்து குடியிருப்போருக்கு பட்டா வழங்கும்போது, அரசு அலுவலர்களையும் பரிசீலிக்க வேண்டும்' என வருவாய்த்துறை பதவி உயர்வு அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழக அரசு நகர்ப்புற பகுதிகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு நிலங்களில் வீடுகட்டி குடியிருப்போருக்கு அந்த இடத்தை வரன்முறை செய்து பட்டா வழங்கலாம் என உத்தரவிட்டுள்ளது. இந்த நிலம் ஆட்சேபனை இல்லாத நிலமாக இருக்க வேண்டும். நகரத்தில் இருந்து 16 கி.மீ., சுற்றளவுக்குள் இருக்க வேண்டும். இதற்காக 1962 ல் விதிக்கப்பட்ட ஆணையை தளர்வு செய்து, 2025 பிப்ரவரியில் அரசாணை (எண் 97) வெளியிடப்பட்டது. இதன்படி குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். சென்னை, தாம்பரம், ஆவடியில் குடியிருப்போருக்கு ஒரு சென்ட், மற்ற நகர் பகுதிகளில் 2 சென்ட், ஊரக பகுதிகளில் 3 சென்ட் அளவில் இலவசமாக பட்டா வழங்கலாம். அதற்கு மேல் ஆக்கிரமித்து வீடுகட்டி இருந்தால், கூடுதல் இடத்திற்கு மட்டும் வழிகாட்டி மதிப்பில் பணத்தை செலுத்தி பட்டா பெறலாம். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மேல் இருந்தால் ஆக்கிரமிப்பு பகுதி முழுவதற்கும் பணம் செலுத்த வேணடும், என ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட காலமாக எதிர்பார்த்த பட்டா பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அரசு ஊழியர்கள் அதிருப்தி அதேசமயம் ஒரு அரசு ஊழியர் தனது வீட்டுக்கு பட்டா கேட்டால் வருவாய் அலுவலர்கள் அவருக்கு வழங்க மறுக்கின்றனர். அரசு ஊழியர்கள், அலுவலர்கள் பற்றி அரசாணையில் குறிப்பிடாததால் மறுப்பதாக கூறுகின்றனர். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மேல் என்ற வரையறைக்குள் அரசு அலுவலர்களும் அடங்கியுள்ளனர் என்பதை பாராமல், பொதுமக்களுக்கு மட்டும் என்பது ஏமாற்றத்தை அளிப்பதாக அலுவலர்கள் அதிருப்தி தெரிவிக் கின்றனர். வருவாய்த்துறை பதவி உயர்வு அலுவலர்கள் சங்க மாநில தலைவர் ராமச்சந்திரன், பொதுச் செயலாளர் ஜெயகணேஷ் கூறியதாவது: ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மேல் என நிர்ணயிக்கும்போது அரசு அலுவலர்களும் அதில் வருவர். ஆனால் வருவாய் அலுவலர்கள் மறுப்பதால் பலர் பாதிக்கப்படுகின்றனர். அடிப்படை பணியாளர்கள் பலர் இவ்வகையில் ரூ.3 லட்சத்தைத் தாண்டி சம்பளம் பெறுவர். அவர்களில் பலர் தங்களுக்கு பணம் கொடுத்தாலாவது பட்டா கிடைத்தால் போதும். வேலைகூட தேவையில்லை என்ற நிலையில் உள்ளனர். முழுநிலத்திற்கும் தொகையை செலுத்தும்போது பட்டா கொடுப்பதால் அரசுக்கு இழப்பு ஏற் படுவதில்லை என்றனர்.