மேலும் செய்திகள்
நவ.22 முதல் டிச.3 வரை உணவுத்திருவிழா
1 minute ago
மின்வாரிய மனுவுக்கு உடனடியான தீர்வு
1 minutes ago
புரிந்துணர்வு ஒப்பந்தம்
1 minutes ago
மதுரை: மதுரையில் அரசு ஊழியர், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. அரசு பணியில் 1.4.2003க்கு பின்பு நியமனம் பெற்றோருக்கு பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளத்தை வழங்க வேண்டும். அரசு துறைகளில் 30 சதவீதத்திற்கும் மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். கருணை பணிநியமனத்தில் 5 சதவீதமாக இருப்பதை 25 சதவீதமாக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு துறை ஊழியர்கள், ஆசிரியர்கள் 2100 பேருக்கும் மேல் விடுப்பு எடுத்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கர் பேசினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரபோஸ், பாண்டி, நவநீதகிருஷ்ணன், பொற்செல்வன், பீட்டர் ஆரோக்கியராஜ், தமிழ் பங்கேற்றனர். இதனால் வருவாய், வணிகவரி, கல்வித்துறையில் பணிகள் பாதித்தன. புதுார் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் சங்க துணைத் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். செயலாளர் மாரி, கல்லுாரி ஓய்வு ஆசிரியர்கள் சங்க புரவலர் பார்த்தசாரதி, செயலாளர் பெரியதம்பி பேசினர். அரசு ஊழியர்கள் சங்க துணைத்தலைவர் நுார்ஜஹான், சத்துணவு ஊழியர் சங்க துணைத்தலைவர் அமுதா, டான்சாக் முத்துமோகன், சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க இணை ஒருங்கிணைப்பாளர் குப்புஜோதி, முன்னாள் பொருளாளர் கல்யாணசுந்தரம் பங்கேற்றனர். அரசுப் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் கூறுகையில், ''பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற மறுக்கும் அரசு, பணியாளர்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. இனியும் அரசு பணியாளர்கள் ஏமாறத் தயாராக இல்லை'' என்றார்.
மதுரையில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் போராட்டம் காரணமாக சில அரசு பள்ளிகளில் கிளார்க்குகள், தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நேற்று இடைப்பருவத் தேர்வு நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ஜாக்டோ ஜியோ போராட்டம் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. மாவட்டத்தில் உயர், மேல்நிலை பள்ளிகளில் 1200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ள நிலையில், தலைமையாசிரியர்கள் உட்பட 931 பேர் வரை நேற்று பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் இரண்டாம் இடைப்பருவ தேர்வு நடத்தப்பட்ட முறை கேள்விக்குறியாகியுள்ளது. இத்தேர்வு நவ., 10 முதல் 12 வரை நடப்பதாக இருந்தது. இது மாற்றப்பட்டு நவ.,17 முதல் 19 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டது. நவ.18 வேலை நிறுத்தம் என்பதால் அந்த நாளில் நடக்கும் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என சி.இ.ஓ., தயாளனிடம் மனு அளித்தோம். ஆனால் நடவடிக்கை இல்லை. இதனால் கிளார்க்குகள் மூலம் தேர்வு நடத்தப்பட்டுள்ளது என்றனர். கல்வி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது 'இடைப்பருவ தேர்வுகள் நேற்று முறையாக நடத்தப்பட்டது' என்றார்.
1 minute ago
1 minutes ago
1 minutes ago