கார் வாங்கும் கனவுக்கு கைகொடுக்கும் ஜி.எஸ்.டி., குறைப்பு
விற்பனை 20 சதவீதம் அதிகம் சுரேஷ்பாண்டி, விற்பனைப்பிரிவு தலைவர், போக்ஸ்வேகன்: விர்டஸ், டைகுன் ரக கார்களுக்கு ஜி.எஸ்.டி., செஸ்வரி சேர்த்து 45 சதவீத வரி விதிக்கப்பட்டது. தற்போது செஸ் வரியை நீக்கி விட்டு எஸ்.யு.வி., ரக கார்களுக்கு 40 சதவீத ஜி.எஸ்.டி., வரியாக கொண்டு வந்துள்ளனர். டைகன், விர்டஸ் ரகங்களுக்கு ரூ.65ஆயிரம் வரையும் டிகுவான் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.ஒன்றரை லட்சம் வரை ஜி.எஸ்.டி., வரி குறைந்துள்ளது. டிகுவான் மாடலின் ரோடு விலை ரூ.60 லட்சம். இது இறக்குமதி கார் என்பதால் ரூ.2 லட்சம் தள்ளுபடி தருகிறோம். மொத்தத்தில் ரூ.3.5 லட்சம் வரை காரின் விலையில் குறைவதால் மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. மூன்று ரக கார்களும் சேர்த்து மாதம் 35 கார்கள் வரை விற்பனை செய்தோம். வரிக் குறைப்பால் தற்போது 15 முதல் 20 சதவீத விற்பனை அதிகரித்துள்ளது. அதாவது மாதம் 42 கார்கள் வரை விற்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதை நல்ல மாற்றமாக பார்க்கிறோம். ஆதாயம் கிடைக்க 2 மாதங்களாகும் அன்புகுமார், பொதுமேலாளர் ஏ.ஆர்.ஏ.எஸ்.கியா: எங்களின் ரெகுலர் விற்பனையில் 60 சதவீதம் கேரன்ஸ், கிளாவிஸ் ரக கார்கள் தான். ஜி.எஸ்.டி., வரிச்சீரமைப்பிற்கு முன், கார்களின் விற்பனையில் தொய்வில்லை. நீளம் 4 மீட்டருக்கு கீழ் உள்ள சோனட் ரக காருக்கு தான் 11 சதவீத தள்ளுபடி வீதம் அதிகபட்சம் ரூ.65ஆயிரத்தில் இருந்து டாப் மாடல் கார்களுக்கு ரூ.1.70 லட்சம் வரை கார் வாங்குவோருக்கு வரிக்குறைப்பு கிடைக்கிறது. கேரன்ஸ் கிளாவிஸ், செல்டாஸ் ரக கார்களுக்கு அதிகபட்சமாக ரூ.89ஆயிரம் முதல் ரூ.ஒரு லட்சம் வரை விலை குறைக்கப் பட்டுள்ளது. விற்பனை என்று பார்த்தால் எதிர்பார்த்த பிசினஸ் கிடைக்கவில்லை. ஜி.எஸ்.டி., வரிக்குறைப்பு வரும் என்ற எதிர்பார்ப்பால் இரண்டு மாதங்களாக பிசினஸ் குறைந்துவிட்டது. விலைக்குறைப்பை மக்கள் எதிர்பார்த்து கார் வாங்கும் திட்டத்தை தள்ளி வைத்ததால் ஆகஸ்ட், செப்டம்பரில் விற்பனை குறைந்து விட்டது. அக்., நவம்பரில் முக்கியமான விழாக்கள் என்பதால் விற்பனை மந்தமாகும். ஜி.எஸ்.டி. வரிக்குறைப்புக்கான உண்மையான ஆதாயம் கிடைப்பதற்கு இன்னும் இரண்டு மாதங்களாகும். நவம்பர், டிசம்பரில் விற்பனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மத்திய அரசு திடீரென செஸ் வரியை நீக்கியுள்ளது. ஆனால் ஏற்கனவே நாங்கள் வாங்கி வைத்த 200 கார்களுக்கு செஸ் வரி செலுத்திய நிலையில் இந்த வரியை அரசிடம் இருந்து திரும்பப் பெற முடியாது. இது எங்களுக்கு நஷ்டம் தான். விற்பனை 4 மடங்கு அதிகம் அவையத்தான், விற்பனை தலைமை அதிகாரி, ஏ.பி.டி. மாருதி: மாருதியில் அனைத்து வாகனங்களிலும் குறைந்தது ரூ.60ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை, கார் வாங்குவோருக்கு வரிக்குறைப்பு கிடைக்கிறது. காரின் விலையையும் நாங்கள் குறைத்துள்ளதால் 'ஆன் ரோடு' விலை குறைவை எதிர்பார்க்கலாம். ஆகஸ்ட் வரை ஆல்டோ கே டென், செலரியோ, எஸ்பிரஷோ, வேகன்ஆர் போன்ற சிறிய ரக கார்களின் விற்பனையுடன் ஒப்பிடும் போது நடுத்தர வர்க்கத்தினரின் கார் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது. கே டென் காரின் 'ஆன்ரோடு'விலையே ரூ.4.50 லட்சம் தான். டூவீலர்கள் வைத்திருப்பவர்கள் சிறிய ரக கார்கள் வாங்குவது அதிகரித்துள்ளது. செப். 20 ல் இந்தியா முழுவதும் உள்ள மாருதி டீலர்களின் ஒருநாள் மொத்த 'புக்கிங்' 30ஆயிரம் கார்கள். மதுரையில் 4 டீலர்கள் மூலம் ஒரே நாளில் 600 கார்கள் 'புக்கிங்' ஆனது. இதுவே ஆகஸ்டில் ஒரே நாளில் 150 கார்கள் தான் பதிவாகியிருந்தது. தற்போது விற்பனை எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. எஸ்.யூ.வி., கார்களுக்கு கூடுதல் வரவேற்பு ஜானகிராம், விற்பனை பொது மேலாளர், சுசீ கார்ஸ் : ஜி.எஸ்.டி., வரிக் குறைப்பிற்கு பின் 4 மீட்டர் நீளத்திற்குட்பட்ட கார்களுக்கு 28ல் இருந்து 18 சதவீதம், சொகுசு கார்களுக்கு 45ல் இருந்து 40 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.2.5 லட்சம் வரை கார்களின் விலை குறைந்துள்ளது. குறிப்பாக 'காம்பேக்ட் எஸ்.யூ.வி.,' வகை கார்கள் ரூ.10 லட்சத்திற்கு கீழ் வருவதால் 18 சதவீதமாக இருந்த ரோடு வரியும் 13 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக 'வென்யூ', 'எக்ஸ்டர்', 'க்ரெட்டா' போன்ற எஸ்.யூ.வி., வகை கார்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. கார்களின் விலை குறித்த நுகர்வோரின் விசாரணை கடந்தாண்டை விட 23 சதவீதமும் முன்பதிவு 30 சதவீதம் உயர்ந்துள்ளது. மாதம் 150 கார்கள் விற்றநிலையில் தற்போது 200 கார்கள் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம். பண்டிகையை முன்னிட்டு ஜி.எஸ்.டி., வரி குறைக்கப்பட்டதால் அடுத்த 2 மாதங்களுக்குள் இந்தியாவில் ஆட்டோமொபைல் பிரிவு வளர்ச்சி பெறும். ஒட்டுமொத்தமாக 30 சதவீதம் வரை கார் சந்தையின் வளர்ச்சி இருக்கும். ஹூண்டாய் நிறுவன கார்களுக்கு, தீபாவளி வரை கார்களின் 'வேரியன்ட்'டை பொறுத்து ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை 'கேஷ்பேக்' அல்லது 'அசெஸ்சரீஸ்' வகையில் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் வழங்குகிறோம். அதிக வசதி கொண்ட மாடல்கள் தேர்வு ஜெயகுமார், பொது மேலாளர், மஹிந்த்ரா ஆட்டோமோடிவ்: கார்களுக்கான வாடிக்கையாளர்களின் விசாரணை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. '3எக்ஸ்ஓ', 'எக்ஸ்.யூ.வி.,700' வகை கார்களுக்கு வரவேற்பு அதிகம் உள்ளது. புரட்டாசி மாதத்தில் விற்பனை குறைவாகவே இருக்கும். ஜி.எஸ்.டி., வரி குறைப்பால் இம்மாதம் முன்பதிவு 10 சதவீதம் அதிகரித்துள்ளது. 'பொலிரோ பி6 ஆப்ஷனல் வேரியன்ட்' தற்போது ரூ.10 லட்சத்திற்குள் கிடைப்பதால் ரோடு வரி குறைந்து ரூ.1.5 லட்சம் வரை வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு கிடைக்கிறது. ஒட்டுமொத்தமாக ரூ.2.5 லட்சம் வரை கார்களின் விலை குறைந்துள்ளதால் அதிக வசதி கொண்ட மாடல்களை மக்கள் தேர்வு செய்கின்றனர். பண்டிகை காலத்தை முன்னிட்டு வேரியன்ட்களுக்கு ஏற்ப ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை 'ஆபர்' வழங்குகிறோம். வாகனத் துறையின் வளர்ச்சிக்கு அடித்தளம் சேதுராஜன், சி.இ.ஓ., ஆனைமலைஸ் டொயோட்டா: வரிக் குறைப்பால் செப். 15 முதல் முன்பதிவு அதிகரித்து வருகிறது. 'கிளான்ஸா', 'டெய்சர்' உள்ளிட்ட கார்களுக்கு ரூ.60 ஆயிரம் வரையும் 'பிரீமியம்' வகை கார்களுக்கு ரூ.3 லட்சம் வரை விலை குறைகிறது. ஆட்டோமொபைல் துறை கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சி கண்டு வருகிறது. ஒரு மாதம் முதல் 45 நாட்கள் வரையில் நுாற்றுக்கணக்கான கார்களை டீலர்கள் 'ஸ்டாக்' வைத்துள்ளனர். அதற்கான 'செஸ்' வரி சம்பந்தமான விளக்கத்தை மத்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. எனினும் ஜி.எஸ்.டி., வரி குறைப்பால் செப். 22க்கு பின் வாகன வணிகம் அதிகரிக்கும். அனைத்து வகை கார்களுக்கும் கடந்தாண்டு வழங்கப்பட்ட 'ஆபர்'கள் தற்போதும் தொடர்கிறது. இன்னோவா கிறிஸ்டா வாங்கும் டாக்ஸி பயனாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் வரையில் 4 மாத தவணை மிச்சமாகிறது. வாகனத்துறையின் நீண்டகால வளர்ச்சிக்கு ஜி.எஸ்.டி., வரி குறைப்பு அடித்தளமாக அமையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.