உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போதைப்பொருள் வழக்கு ஆசிரியை ஜாமின் மனு தள்ளுபடி உயர்நீதிமன்றம் உத்தரவு

போதைப்பொருள் வழக்கு ஆசிரியை ஜாமின் மனு தள்ளுபடி உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : 'மெத்தம்பெட்டமைன்' போதைப் பொருள் பறிமுதல் வழக்கில் சென்னை ஆசிரியையின் ஜாமின் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.மதுரைக்கு 2024 மார்ச் 1ல் வந்த ஒரு ரயிலில் மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் சோதனையிட்டனர். பிலோமென் பிரகாஷ் என்பவரிடமிருந்து 31.50 கிலோகிராம் 'மெத்தம்பெட்டமைன்' போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். சென்னையிலுள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு எதுவும் மீட்கப்படவில்லை. கொடுங்கையூரிலுள்ள சென்னை மாநகராட்சி குப்பைத் தொட்டியிலிருந்து குறிப்பிட்ட அளவு 'மெத்தம்பெட்டமைன்' கண்டறியப்பட்டது. 'மெத்தம்பெட்டமை'னை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தி ஆதாரங்களை அழிக்க முயன்றதாக பிலோமென் பிரகாஷின் மனைவி மோனிஷா ஷீலா மீது வருவாய் புலனாய்வு இயக்குனரகம் வழக்கு பதிந்தது. மோனிஷா ஷீலா உயர்நீதிமன்றக் கிளையில் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.நீதிபதி ஆர்.சக்திவேல் விசாரித்தார்.அரசு வழக்கறிஞர்: இவ்வழக்கில் 37.645 கிலோ கிராம் 'மெத்தம்பெட்டமைன்' பறிமுதல் செய்யப்பட்டது. மனுதாரர் தனது கணவருடன் சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டார். மனுதாரருக்கு ஜாமின் அனுமதித்தால் தலைமறைவாகிவிடுவார். விசாரணையில் தாமதம் ஏற்படும். மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்: மனுதாரர் அப்பாவி. அரசு தரப்பு கூறுவதுபோல் அவர் எந்த தவறும் செய்யவில்லை. மனுதாரர் ஒரு பள்ளியின் ஆசிரியை. அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மனுதாரரிடமிருந்து நேரடியாக எதுவும் மீட்கப்படவில்லை. அவர் 2024 மார்ச் 2 முதல் நீதிமன்ற காவலில் உள்ளார். விசாரணை முடிந்துவிட்டது. ஜாமின் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதி: சூழ்நிலை, குற்றத்தின் தன்மையை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு ஜாமின் வழங்க விரும்பவில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை