நெல்பேட்டை மீன்மார்க்கெட்டை மாற்ற வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மதுரை: மதுரை நெல்பேட்டை மீன் மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.மதுரை ஆதம்பாவா தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை நெல்பேட்டையில் 100 ஆண்டுகளாக குடியிருப்பு பகுதியில் மீன் மார்க்கெட் உள்ளது.சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மார்க்கெட்டை அகற்றிவிட்டு அதே பகுதியில் புதிதாக அமைக்க அரசு தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. கரிமேடு மீன் மார்க்கெட் மாட்டுத்தாவணிக்கு மாற்றப்பட்டது.நெல்பேட்டையில் அதே இடத்தில் மீன் மார்க்கெட் புதிதாக அமைக்க தடை விதிக்க வேண்டும். மீன்மார்க்கெட், ஆடு வதைக்கூடத்தை மதுரைக்கு வெளியே குடியிருப்புகளுக்கு அப்பால் மாற்றியமைக்க கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர் தேவசேனா, 'அது மாநகராட்சிக்கு சொந்தமான இடம். ஏற்கனவே உள்ள பழமையான மார்க்கெட்டை அகற்றிவிட்டு அதே இடத்தில் ரூ.2.6 கோடியில் புதிதாக அமைக்கும் பணி துவங்கியுள்ளது,' என்றார்.நீதிபதிகள், 'மாநகராட்சியின் நிர்வாக ரீதியான முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,' என உத்தரவிட்டனர்.