உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு மேயரின் கணவருக்கு ஜாமின் உயர்நீதிமன்றம் உத்தரவு

மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு மேயரின் கணவருக்கு ஜாமின் உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மதுரை மாநகராட்சி பகுதியில் வரி விதிப்பு முறைகேடு தொடர்பான வழக்கில் கைதான மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமின் அனுமதித்தது. 2022-24 ல் வரி விதிப்பில் நடந்த முறைகேட்டால் மாநகராட்சிக்கு ரூ.1.5 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். இவ்வழக்கில் கைதான உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், மாநகராட்சி வரிவிதிப்புக்குழு முன்னாள் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் உட்பட சிலருக்கு உயர்நீதிமன்றக்கிளை ஜாமின் அனுமதித்தது. மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் ஆக., 12 ல் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமின் மனுவை ஏற்கனவே மதுரை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தன. பொன்வசந்த் மீண்டும் உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: நான் மாநகராட்சி ஊழியரோ அல்லது ஒப்பந்ததாரரோ அல்ல; ஒரு வழக்கறிஞர். வரி வசூலில் எனக்கு தொடர்பு இல்லை. எனக்கு உடல்நல பாதிப்பால் சிகிச்சை பெற வேண்டியுள்ளது. காழ்ப்புணர்ச்சி காரணமாக எனக்கு எதிராக பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. எனக்கு எதிராக எவ்வித ஆவணமும் இல்லை. காளவாசலிலுள்ள ஒரு கட்டடத்திற்கு வரியை குறைக்க நான் காரணமாக இருந்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது. தற்போது அக்கட்டட உரிமையாளர் நிர்ணயிக்கப்பட்ட வரி முழுவதையும் செலுத்தி விட்டார். என்னால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படவில்லை. குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இல்லை. ஜாமின் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார். மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கார்த்திகேயன், வழக்கறிஞர் கிஷோர்குமார் ஆஜராகினர். அரசு வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்தார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு: வழக்கு தொடர்பான ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மனுதாரரை காவலில் எடுத்து விசாரிக்க தேவையில்லை. ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. நான்கு வாரங்களுக்கு தினமும் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை