மாட்டுத்தாவணி-சர்வேயர் காலனி ரோடு டாஸ்மாக் கடை மூடப்பட்டது உயர்நீதிமன்றத்தில் தகவல்
மதுரை : மதுரை மாட்டுத்தாவணி - சர்வேயர் காலனி ரோடு பகுதி டாஸ்மாக் கடையை மூட கோரிய வழக்கில் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டதாக அரசு தரப்பு தெரிவித்ததை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணையை முடித்து வைத்தது.மதுரை கோடீஸ்வரன் தாக்கல் செய்த பொதுநல மனு: மாட்டுத்தாவணி-சர்வேயர் காலனி 120 அடி ரோடு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. கடை அமைந்துள்ள நிலம் வருவாய்த்துறை ஆவணங்களின்படி மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமானது. அங்கு டாஸ்மாக் கடை துவங்க கோயில் நிர்வாகம் அனுமதியளிக்கவில்லை. அருகே பள்ளி, மருத்துவமனைகள் உள்ளன. விதிகளுக்கு புறம்பாக செயல்படும் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற அல்லது மூட வேண்டும் என கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.மே 8ல் விசாரணையின் போது அரசு தரப்பு: அந்நிலம் தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமாக இருந்தது. அதை குத்தகைக்கு அனுபவித்த ஒருவர் நிலம் தொடர்பாக தனக்கு சாதகமாக நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றார். நிலத்திற்குரிய தொகையை செலுத்தியுள்ளார். டாஸ்மாக் அமைந்துள்ள நிலம் தனிநபருக்கு சொந்தமானது. கோயில், அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் அல்ல. இவ்வாறு தெரிவித்தது. நீதிபதிகள் அமர்வு கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு நேற்று விசாரித்தது.அரசு தரப்பு,'டாஸ்மாக் கடை ஏற்கனவே மூடப்பட்டுவிட்டது,' என தெரிவித்தது.இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்தனர்.