பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் வாங்கியதில் முறைகேடு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை,: திருச்சி, தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு ஆய்வக கம்ப்யூட்டர் கொள்முதல் முறைகேடு குறித்து விசாரணை கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.தஞ்சாவூர் குணசேகரன் தாக்கல் செய்த பொதுநல மனு: மத்திய கல்வி அமைச்சகம் அனைத்து அரசு பள்ளிகளிலும் போதிய ஆய்வக வசதி ஏற்படுத்த 'அடல் டிங்கரிங் லேப்' திட்டத்தை செயல்படுத்துகிறது. மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் நிதியை வழங்குகின்றன. பள்ளிகளுக்குரிய நிதியை எவ்வாறு செலவிடுவது குறித்து வழிகாட்டுதல்கள் உள்ளன. ரூ.25 ஆயிரத்திற்கு மேல் செலவிட வேண்டியிருந்தால் பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி நிர்வாகக் குழு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பொருட்கள் கொள்முதலுக்கு டெண்டர் விட வேண்டும்.திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட பள்ளிகளில் பொருட்களின் தரம் சம்பந்தமான கொள்முதல் விதியை பின்பற்றவில்லை. கம்ப்யூட்டர், '3டி' பிரின்டர்கள், மின் இயந்திர கருவிகள் கொள்முதலில் தரச்சான்றிதழ் பெறவில்லை.திருவாரூர் மாவட்டத்திலுள்ள சில அரசு பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருச்சி, தஞ்சாவூர் மாவட்ட அரசு மேல்நிலை பள்ளிகளில் நடந்த முறைகேடு குறித்து நடவடிக்கை இல்லை.அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவது, அறிவியல் மனப்பான்மை, படைப்பாற்றலை உருவாக்குவதே திட்டத்தின் நோக்கம்.திருச்சி, தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு ஆய்வக பொருட்கள் கொள்முதலில் முறைகேடு குறித்து விசாரணை கோரி தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு புகார் அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சாமுண்டி போஸ் ஆஜரானார். நீதிபதிகள் பள்ளிக் கல்வித்துறை செயலர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.