மீனாட்சி அம்மன் கோயில் தியான மண்டபம் பயன்பாட்டிற்கு கொண்டுவர வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பூட்டி வைக்கப்பட்டுள்ள தியான மண்டபத்தை பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர தாக்கலான வழக்கில் அறநிலையத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.மதுரை மாவட்டம் சின்னகொட்டாம்பட்டி கருப்பு தாக்கல் செய்த பொது நல மனு: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தியான மண்டபம் உள்ளது. இதில் பக்தர்கள் தியானம் செய்வது நடைமுறையில் இருந்தது. தற்போது மண்டபத்தில் மரம், இரும்பு பொருட்களை வைத்து பூட்டியுள்ளனர். தியானம் செய்ய பக்தர்களை அனுமதிப்பதில்லை. இது பக்தர்களின் மனதை புண்படுத்தும் செயல். பொருட்களை அகற்றிவிட்டு, மண்டபத்தில் பக்தர்களை தியானம் செய்ய அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பெல்கோ எஸ்.மெல்டியூ ஆஜரானார்.நீதிபதிகள்: தியான மண்டபத்தில் பழைய பொருட்களை வைத்தது ஏன். அவற்றை பாதுகாக்க வேறு இடத்தில் கோடவுன் அமைக்காதது ஏன்.அறநிலையத்துறை தரப்பு வழக்கறிஞர் சுப்பாராஜ்: கும்பாபிஷேகத்தையொட்டி புனரமைப்பு பணி நடக்கிறது. கோயில் பிரகாரத்தை வலம் வரும் குதிரை வாகனங்கள் தற்காலிகமாக தியான மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளன. தியானத்திற்கு மாற்று இடம் ஒதுக்குவது குறித்து முடிவெடுக்க 2 வாரம் அவகாசம் தேவை.இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதிகள் அறநிலையத்துறை கமிஷனர், கோயில் இணை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.