மதுரை மாநகராட்சியுடன் இணைப்பிற்கு எதிராக வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, : மதுரை மாநகராட்சியுடன் நரசிங்கம், ஏற்குடி அச்சம்பத்து ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிரான வழக்கில், அரசிடம் ஆட்சேபனை மனு அளித்து நிவாரணம் தேடலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை நரசிங்கம் சசிகுமார் தாக்கல் செய்த மனு:நரசிங்கம் ஊராட்சியை மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இணைக்க தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை டிச.31 ல் அரசாணை வெளியிட்டது. இதற்கு கவர்னரின் ஒப்புதல் பெறவில்லை. இணைப்பதற்கு ஏற்புடைய காரணங்களை தெரிவிக்கவில்லை. ஏற்கனவே மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட விரிவாக்கப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றவில்லை. நரசிங்கத்தை இணைத்தால் சொத்துவரி உயரும். விவசாயிகள் பாதிக்கப்படுவர். அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.மதுரை மதன்குமார், 'ஏற்குடி அச்சம்பத்து ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் அரசாணைக்கு தடை விதித்து ரத்து செய்ய வேண்டும்,' என மனு செய்தார்.நீதிபதி விவேக்குமார் சிங் விசாரித்தார்.மாநகராட்சி தரப்பு: கவர்னரின் ஒப்புதலுடன் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசிடம் ஆட்சேபனை தெரிவிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதை தவிர்த்து முன்கூட்டியே இங்கு மனு செய்தது ஏற்புடையதல்ல. இவ்வாறு தெரிவித்தது.நீதிபதி: மனுதாரர்கள் அரசிடம் ஆட்சேபனை மனு அளித்து நிவாரணம் தேடலாம். இவ்வாறு உத்தரவிட்டார்.