திருச்செந்துார் கோவிலில் புரோக்கர்கள் வழக்கு பதிய உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களிடம் பணம் பெற்று தரிசனத்திற்கு அழைத்துச் செல்லும் புரோக்கர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தர விட்டு உள்ளது. சென்னை, சண்முகராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 100 ரூபாய் கட்டண தரிசனம் மற்றும் இலவச தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை கோவில் நிர்வாகம் வழங்குகிறது. கோவில் இணையதளத்தில் பல்வேறு பூஜைகளுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் கிடைக்கின்றன. சிறப்பு தரிசனம் கோவிலுக்குள் பக்தர்கள் நுழைவதை ஒழுங்குபடுத்த முறையான ஏற்பாடுகளை நிர்வாகம் செய்யவில்லை. சிறப்பு தரிசனத்திற்கு, 100 ரூபாய்க்கான டிக்கெட்டுகள் கிடைப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதிகாரப்பூர்வமற்ற நுழைவு வாயில்கள் வழியாக பக்தர்கள் உள்ளே நுழைய, அங்கீகரிக்கப்படாத நபர்கள் உதவுகின்றனர். இதனால் மற்ற பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி யுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அதிகாரிகள் கடமை. ஆனால், கோவிலில் அத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. சட்டவிரோதம் சட்டவிரோதமாக பணம் வழங்குவோரை, பூஜாரிகள் தோற்றத்திலுள்ள அங்கீகரிக்கப்படாத நபர்கள் கோவிலுக்குள் அழைத்து செல்கின்றனர். ஒவ்வொருவரிடமும் மோசடியாக, 2,000 முதல் 10,000 ரூபாய் வரை அந்த நபர்கள் வசூலிக்கின்றனர். தரிசன நுழைவு மற்றும் கட்டணத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். அங்கீகரிக்கப்படாத நபர்கள், புரோக்கர்கள் தரிசன நுழைவு டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்து, பணம் வசூலிப்பதை கட்டுப்படுத்த அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள் முருகன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சரத்குமார் ஆஜரானார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பக்தர்கள் அமைதியான முறையில் வழிபடும் ஏற்பாடுகளை உறுதி செய்வது அறநிலையத்துறை, கோவில் நிர்வாகத்தின் கடமை. பக்தர்களிடம் சட்டவிரோதமாக பணம் வசூலிக்கும் அங்கீகார மற்ற நபர்களை போலீ சார் அப்புறப்படுத்த வேண்டும். அந்நபர்கள் மீது வழக்கு பதிய வேண்டும். கோவிலில் கூடுதல் போலீசாரை பாதுகாப்பில் ஈடுபடுத்த துாத்துக்குடி எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும். அறநிலையத்துறை கமிஷனர், கோவில் இணை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.