கல்லுாரி மாணவருக்கு பணிவாய்ப்பு தந்தால் ஊக்கத்தொகை கரும்பு தின்ன கூலி ; 504 நிறுவனங்களுக்கும் 5100 மாணவருக்கும் கைமேல் பலன்
மதுரை: படித்து முடித்து கல்லுாரியில் இருந்து வெளிவரும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கும், மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கும் மத்திய அரசின் திட்டத்தால், மதுரை மண்டலத்தில் 504 நிறுவனங்களும், 5100 மாணவர்களும் பயனடைந்துள்ளனர். மத்திய அரசின் தொழிலாளர் நல பாதுகாப்பில் பிரதானமானது வருங்கால வைப்பு நிதி. இதில் வருங்கால வைப்பு நிதி, பென்ஷன், இன்சூரன்ஸ் போன்றவை கிடைக்கின்றன. அதன் தொடர்ச்சியாக, 'பிரதம மந்திரி வளரும் பாரதத்தின் வேலைவாய்ப்பு திட்டம்' எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வேலை தந்தால் ஊக்கத்தொகை கல்லுாரியில் படித்து முடித்தவுடன் அனுபவமின்றி வருவோருக்கு வேலைவாய்ப்பளித்தால் அந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஊக்கத்தொகை தரும் திட்டம் இது. இந்தாண்டு ஆக.1ல் அமலானது. மாணவரை தேர்வு செய்து, மாதம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் சம்பளம் வழங்கினால், வேலை அளிக்கும் நிறுவனத்திற்கு மாதம் ரூ.3 ஆயிரத்தை மத்திய அரசு வழங்குகிறது. அதுவே ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரத்திற்குள் சம்பளம் வழங்கினால் மாதம் ரூ.2 ஆயிரம், ரூ.10 ஆயிரத்துக்கு குறைவாக சம்பளம் வழங்கினால் மாதம் ரூ. ஆயிரம் அந்நிறுவனத்திற்கு வழங்கப்படும். இது எல்லா துறைகளுக்கும் 2027 ஜூலை 31 வரை தொடர்ந்து வழங்கப்படும். அதுவே உற்பத்தித் துறை என்றால் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அந்த ஊழியருக்கு ஒருமாத சம்பளம் இருதவணைகளில் வழங்கப்படும். 2 மாதத்தில் 504 நிறுவனங்கள் மதுரை மண்டலத்தில் இரண்டே மாதங்களில் இத்திட்டத்தால் 504 தனியார் நிறுவனங்கள் ஊக்கத் தொகை பெறுகின்றன. அந்நிறுவனங்களில் புதிதாக பணிவாய்ப்பு பெற்ற 5100 ஊழியர்களுக்கும் ஒருமாத சம்பளம் 2 தவணைகளில் கிடைக்க உள்ளது. இப்படி கரும்பு தின்ன கூலி கொடுக்கும் திட்டம் குறித்து மதுரை பி.எப்., அலுவலக ஆணையாளர் அழகியமணவாளன், அமலாக்க அதிகாரிகள் ஹேமமாலினி, மனோகரன் ஆகியோர் கல்லுாரிதோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.