உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒற்றுமை இல்லாவிடில் திருவிழா நடத்தக்கூடாது; : உயர்நீதிமன்றம்

ஒற்றுமை இல்லாவிடில் திருவிழா நடத்தக்கூடாது; : உயர்நீதிமன்றம்

மதுரை : கரூர் மாவட்டம் குளித்தலை அருகே 'மாடு மறிக்கும் திருவிழா' நடத்துவதில் ஒற்றுமை ஏற்படாவிடில் நடத்த வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியது.நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் அமர்வு முன் வழக்கறிஞர் தாளைமுத்தரசு ஆஜராகி முறையிட்டதாவது: குளித்தலை அருகே கள்ளை கிராமத்தில் 'மாடு மறிக்கும் திருவிழாவை' ஒருவர் தன்னிச்சையாக நடத்த முயற்சிக்கிறார். அருகிலுள்ள சில கிராம மக்களை புறக்கணித்துள்ளார். அனைவரும் ஒற்றுமையாக விழா நடத்த சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதை பின்பற்றாமல் விழா நடத்தப்பட உள்ளது. தடை விதிக்க அதே பகுதி கோபால் தாக்கல் செய்யும் மனுவை அவசர வழக்காக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.நீதிபதிகள்: அவசர வழக்காக விசாரிக்க இயலாது. மனிதர்கள் மகிழ்ச்சியாக இருக்கத்தான் திருவிழாக்கள். இதில் ஒவ்வொருவரும் தான்தான் பெரியவர், அவரவர் சமூகம்தான் பெரியது என உரிமை கோருவது ஏற்புடையதல்ல. தன்முனைப்பு (ஈகோ) தான் காரணம் எனில் திருவிழாவை நிறுத்திவிடுங்கள். பேச்சுவார்த்தை நடத்தி ஒற்றுமையாக விழா நடத்துவதாக இருந்தால் நடத்துங்கள். சுமூக உடன்பாடு ஏற்படாவிடில் விழாவை நிறுத்திவிடுங்கள். திருவிழாக்களின்போது பிரச்னை ஏற்பட்டால் வருவாய்த்துறை அதிகாரிகள் தலையிட்டு சமரசம் செய்கின்றனர். அவர்களுக்கு இதைத் தவிர வேறு வேலை எதுவும் இல்லையா. காணும் பொங்கலின்போது கடற்கரையில் அதிக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு அரசு தரப்பிற்கு அறிவுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !