உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நெல் வயல்களில் புகையான் தாக்குதல் பூச்சிகளின் இனப்பெருக்கத்தைத் துாண்டும் மருந்துகளை தவிர்க்க வேண்டும்

நெல் வயல்களில் புகையான் தாக்குதல் பூச்சிகளின் இனப்பெருக்கத்தைத் துாண்டும் மருந்துகளை தவிர்க்க வேண்டும்

மதுரை: மதுரை மேற்கு வட்டாரத்தில் வீரபாண்டி, தவசிப்புதுார், காயாம்பட்டி, குலமங்கலம், அலங்காநல்லுாரில் செம்புகுடிபட்டி, கள்வேலிபட்டி நெல் வயல்களில் காணப்படும் புகையான் பூச்சி தாக்குதலை வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.சோழவந்தான், மேலுார், அலங்காநல்லுாரில் கீழ நாச்சிகுளத்தில் 3 ஆண்டுக்கு ஒருமுறை வரும் புகையான் பூச்சி தாக்குதல் இம்முறை மேற்கு வட்டாரத்தில் பரவியுள்ளது. மாவட்ட வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன், பூச்சியியல் துறை இணைப்பேராசிரியர் சுரேஷ் தலைமையில் வேளாண்மை துறை அலுவலர்கள் விவசாயிகளின் நெல் வயல்களை ஆய்வு செய்தனர்.ஆய்வுக்கு பின் இணைப்பேராசிரியர் சுரேஷ் அவர் கூறியதாவது: இரவில் வெப்பநிலை குறைவாகவும் சூரிய வெளிச்சம் இருப்பதாலும் நெற்பயிரை புகையான் பூச்சிகள் தாக்கியுள்ளன. பாதிக்கப்பட்ட வயல்களில் ஆங்காங்கே வட்டமாக புகைந்தது போல காணப்படும். சில வயல்களில் விவசாயிகள் மீத்தைல் பாரத்தியான், செயற்கை பைரித்ராய்டு மருந்துகளை தெளித்துள்ளனர். இவை பூச்சிகளின் இனப்பெருக்கத்தை துாண்டி விடுவதால் ஒரே வாரத்தில் இவற்றின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து பயிர்களை அதிகம் சேதப்படுத்திவிடும். வயலில் தண்ணீரை வடியவிட்ட பின் மருந்து தெளிக்க வேண்டும். பூச்சிகள் நீந்தி சென்று விடும் என்பதால் பாதிக்கப்பட்ட வயலில் இருந்து அடுத்த வயலுக்கு தண்ணீர் செல்லக்கூடாது. 70 சதவீத பயிர்களில் கதிர் வரும் முன் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.பூச்சி தாக்குதல் குறைவாக இருந்தால் ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் ஒட்டும் திரவத்துடன் 6 லிட்டர் வேப்பெண்ணெய் அல்லது 12 லிட்டர் இலுப்பை எண்ணெய் கலந்து தெளிக்கலாம். அல்லது 10 லிட்டர் வேப்பங்கொட்டை சாறு தெளிக்கலாம்.சேதம் அதிகமானால் ஏக்கருக்கு 300 மில்லி பியுப்ரோபெஷின் (25 எஸ்.சி.) அல்லது 40 மில்லி இமிடகுளோபிரிட் (17.8 எஸ்.எல்.) அல்லது 400 மில்லி பைப்பரினில் (5 எஸ்.சி) அல்லது 300 மில்லி கார்போசல்பான் ஏதாவது ஒன்றை தெளிக்க வேண்டும். தழைச்சத்துகளை 3 அல்லது 4 முறையாக பிரித்து இடவேண்டும். இப்பரிந்துரைகளை விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை