ரூ.22.56 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி விரைவில் துவங்கும் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் தகவல்
மதுரை: மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் புதிய மழைநீர் வடிகால்கள் அமைத்தல், பழைய கால்வாய்கள் புனரமைப்பது குறித்து மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் சித்ரா தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. துணை மேயர் நாகராஜன், ஆர்.டி.ஓ.,ஷாலினி முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர்கள் வாசுகி, சரவணபுவனேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மழைநீர் வடிகால்கள் தொடர்பாக வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கும் தனியார் நிறுவன அதிகாரிகள் பேசியதாவது:மாநகராட்சியில் மொத்த ரோடுகள் நீளம் 1710 கி.மீ., மழைநீர் வடிகால் உள்ள ரோடுகள் நீளம் 512.5 கி.மீ.,. நகரில் 50 ஆண்டுகளுக்கு முன் இருந்த மழைப் பொழிவு அடிப்படையில் மழை நீர்க் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி மழை நீர் தேங்கி பாதிப்பு ஏற்படுத்துவதாக 181 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதியில் மழைநீர் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மீனாட்சி அம்மன்கோயில் பகுதியில் ரூ.11.44 கோடி, தெற்குமாசி வீதியில் ரூ.1.52 கோடி, பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ரூ.9.60 கோடி என மொத்தம் ரூ. 22.56 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் விரைவில் துவங்கவுள்ளது என்றனர்.கிருதுமால் நதி கால்வாய்கள் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் மழைநீர் செல்ல வழியின்றி தடை ஏற்படுவதால் ரோடுகளில் தண்ணீர் தேங்குகிறது. நாகனாகுளம், ஊமச்சிகுளம் கண்மாய்களுக்குரிய கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. மீனாட்சி அம்மன் கோயில் பகுதி கடைகளுக்கு பாதிப்பின்றி புதிய மழைநீர் வடிகால்கள்அமைக்க வேண்டும் உள்ளிட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.