கோயில் நிலத்திற்கு இழப்பீடு உயர்நீதிமன்றத்தில் தகவல்
மதுரை: மதுரை ஒத்தக்கடை கோதண்டராமசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எதிரே உள்ளது. அதை உயர்நீதிமன்றத்திற்கு வரும் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மற்றும் மேம்பாட்டு பணிக்கு கையகப்படுத்த உத்தரவிடக்கோரி அதே நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலானது. ஏற்கனவே விசாரணையின்போது,'நிலத்திற்கு இழப்பீடு தொகையை ஆக.,13 க்குள் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு டெபாசிட் செய்ய வேண்டும். தவறினால் தலைமைச் செயலர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட நேரிடும்,' என உத்தரவிட்டனர். நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு நேற்று விசாரித்தது. அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாஸ்கரன்,'இழப்பீடு தொகை ரூ.25 கோடியே 42 லட்சத்து 21 ஆயிரத்து 775 க்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அது உயர்நீதிமன்ற கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது,' எனக்கூறி அரசாணையை சமர்ப்பித்தார். நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.